அந்த சிறுவனுக்கு 14 வயது. தினமும் அவன் மதுக்கடைக்கு வந்து மது வாங்கிக் கொண்டு செல்வான். விற்பனையாளர், சிறுவனான அவனுக்கு தரமாட்டேன் என்று கூறினால் அடுத்த கடைக்கு போய்விடுவான். அந்த பகுதியில் உள்ள அனைத்து மது விற்பனை கடைகளுக்கும் அவன் அறிமுகமானவன்.
தொடர்ந்து தினமும் அவன் மது வாங்குவதை ஒரு சமூக அமைப்பை சேர்ந்த சில இளைஞர்கள் கண்டு, அவனை கண்காணித்தனர். தினமும் காலையில் அவன் அரக்க பரக்க மார்க்கெட் ஒன்றிற்கு செல்கிறான். அங்கு எடுபிடி வேலை பார்க்கிறான். மதிய உணவைக் கூட அவன் சரியாக சாப்பிடுவதில்லை. மாலையில் 150 முதல் 200 ரூபாய் வரை அவன் கைக்கு வருகிறது.
அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அவன் மதுக் கடைக்கு செல்கிறான். அங்கு விற்பனையாளர் திட்டுகிறார். சிறுவன் கண்களை கசக்குகிறான். பின்பு கோபத்தோடு அவனிடம் மது பாட்டிலை கொடுக்கிறார். அவன் வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி விரைகிறான். வீட்டிற்கு சென்றதும் கதவை மூடிக்கொள்கிறான்.
அதுவரை கண்காணித்த அந்த சமூக சேவகர்கள் சில நிமிடங்கள் வீட்டிற்கு வெளியே அமைதி காத்தனர். பின்பு கதவை தட்ட, அந்த சிறுவன்தான் கதவைத் திறந்தான். அவர்கள் அவன் தோள் மீது கையை போட்டுக்கொண்டு, அன்பாக பேச, வெளியே சத்தம் கேட்டு பத்தி பாட்டிலை காலி செய்து விட்டு மீதி பாட்டிலை கையில் ஏந்தியபடி வீட்டின் உள்ளே இருந்து வந்தாள், ஒரு பெண்.
‘அது என் அம்மாதான்’ என்று கூறிய அவன், அம்மாவை உள்ளே தள்ளி கதவை சாத்திவிட்டு, அவர்களை அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்து சென்று, தன் வாழ்க்கையை விவரிக்க தொடங்கினான்.
“என் அப்பாவிற்கு குடிபழக்கம் உண்டு. அவர் நிரந்தரமாக குடிக்க, அம்மா தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அம்மாவுக்கும் குடிபழக்கத்தை ஏற்படுத்திவிட்டார். நாளடைவில் அம்மாவுக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் வந்தது”. அதை சமாளிக்க முடியாமல், அப்பா எங்கயோ சில வருடங்களாக காணாமல் போய்விட்டார்.
இப்போ என் அம்மா தினமும் மது குடிக்கிறதுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனநிலைக்கு சென்று விட்டார். அந்த அவலத்தை கண் கொண்டு பார்க்க முடியாததால் நான் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, வேலைக்கு போகிறேன். இரவுக்குள் நான் எங்கிருந்தாலும் ஓடிவந்து அம்மாவுக்கு தேவைப்படும் மதுவை வாங்கிக் கொடுத்தாக வேண்டும்.
இந்த பகுதியில் வசிக்கும் பலர் என்னை மதுக் கடைகளில் பார்த்துவிட்டு, ‘குடிகார பய’ என்று திட்டுகிறார்கள். நான் என்ன செய்வது, ‘என் அம்மாதான் குடிக்கிறாள் என்று எப்படி சொல்வது’ என்று கேட்டுவிட்டு அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தினான், அவன்.
அந்த சமூக சேவை அமைப்பினர் இப்போது அந்த பெண்ணை, மது அடிமை மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்க திட்டமிட்டு, அந்த பெண்ணோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தின தந்தி 07-10-2012