திருப்பூர் : பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் இதுவரை நான்கு லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.
காந்திய மக்கள் இயக்கம் சார்பில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கியுள்ளது. திருப்பூரில் அவ்வியக்க மாவட்ட தலைவர் லியோ ஜோசப், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகர தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு, மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதுவரை, நான்கு லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன; மாவட்டம் முழுவதும் 10 லட்சம் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகர செயலாளர் சிவமணி கூறுகையில், “”வரும் அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, ஒரு கோடி கையெழுத்து அடங்கிய, மதுவிலக்கு அமல்படுத்த கோரும் மனுவை, தமிழக முதல்வரிடம் நேரில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது; மதுவின் தீமையை விளக்குவதால், மக்கள் ஆர்வமுடன் ஆதரவு தெரிவிக்கின்றனர். பொது அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து தரப்பிலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஒத்துழைப்பு தந்துள்ளனர். இதுவரை நான்கு லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம்; மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்து, இன்னும் ஆறு லட்சம் கையெழுத்து பெறப்படும்,” என்றார்.
Source : Dinamalar