‘என்னுடைய மதத்துக்குப் பூகோள எல்லைகள் எதுவும் இல்லை. உண் மையும் அன்புமே என் மதத்தின் அடித்தளம். யாரையும் வெறுக்க என் மதம் இடம்தராது. மனிதர்களை இணைப் பதற்காகவே மதம்; பிரிப்பதற்காக அன்று’ என்று விளக்கம் அளித்தவர் அண்ணல் காந்தி. ‘சக மனிதருக்குத் தொண்டாற்றுவதே சமயத்தின் நோக்கம்’ என்று தொடர்ந்து வலி யுறுத்திய மகாத்மா அவர். அறத்தின் விதிவழி அரசியல் நடக்க வேண்டும் என்பது காந்தியின் கனவு. உயர் ஒழுக்கங்களையே மதத்தின் உயிர்நாடியாக உணர்ந்ததால்தான், ‘மதம் இல்லாமல் அரசியல் இல்லை. மதமற்ற அரசியல் ஒரு மரணப்பொறி. ஏனெனில், அது ஆன்மாவைக் கொன்றுவிடுகிறது’ என்று முதலில் கூறினார். ஆனால், காலநடையில் அடிப்படை மதவாதிகள் வெறுப்பு நெருப்பை வளர்த்து, சமூக நல்லிணக்கத்தை எரித்துச் சாம்பலாக் கும் மலினமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதைப் பார்த்து பதறிய அண்ணல், ‘நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதத்தையும் அரசியலையும் தனித்தனியாகப் பிரித்து வைப்பேன். என் மதத்துக்காக உயிரையும் தருவேன். அது என் சொந்த விவகாரம், ஆனால், மதத்தைப் பொறுத்தவரை அரசுக்கு எந்தவொரு வேலையும் இல்லை’ என்று தெளிவாகப் பிரகடனம் செய்தார்.
காலம் முழுவதும் அடிப்படை மதவாதிகளுக்கு எதிராகவும், தன்னல அரசியல் தலைவர்களுக்கு எதி ராகவும் ஒரே நேரத்தில் களமாட வேண்டிய கட்டாயம் காந்திக்கு. வெள்ளையருக்கு எதிரான விடுதலைப் போரில் வெற்றி கண்டவர், சொந்த மனிதர்களின் இருமுனைத் தாக்குதலில் தோல்வியைத்தான் தழுவி னார். சபிக்கப்பட்ட மனிதர் மகாத்மா. கோட்சேவின் மூன்று குண்டுகள் அவரது மெலிந்த உடம்பின் திறந்த மார்பைத் துளைத்து மண்ணில் சாய்ந்தபோது உலகமே கண்ணீரில் கரை புரண்டது. காந்தியைக் கொன்ற கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், ‘பாகிஸ்தானின் பரிந்துரையாளரும் ஆதரவாளரும்தான் காந்திஜி. ‘சகோதரர் ஜின்னா’ என்று சொந்தம் கொண் டாடியவர் அவர். இந்தியாவின் பிரதமராக ஜின்னாவை ஆக்க முயன்றவர். இந்துக்களுக்கு எதிராகப் பலமுறை உண்ணாவிரதம் இருந்தவர். முஸ்லிம்களின் கொடுமைகளுக்கு எதிராக ஒரு முறைகூட உண் ணாவிரதம் இருந்ததில்லை. பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் தந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த அவர், டில்லி பங்கி காலனியில் உள்ள இந்துக் கோயிலில் பிரார்த்தனையின்போது குர்-ஆன் பகுதிகளை வாசிக்க வற்புறுத்தியவர். முஸ்லிம்களிடம் சரணடைவதுதான் அவரது இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் இலக்கணம். அவரது முஸ்லிம் ஆதரவு என்னை எரிச்சலடையச் செய்தது. அவருடைய வாழ்வை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர என் உணர்வுகளைத் தூண்டியது’ என்றான். இதுதான் இந்த நாட்டில் வழிவழியாக இரண்டு பக்கங்களிலும் வளர்ந்து வரும் வகுப்புவாத வரலாறு. மதநல்லிணக்கத்தை அரசியல் ஆதாயத்துக்காகப் பாழ்படுத்த முனையும் வகுப்புவாத வெறியர்கள் காந்தி காலம் தொட்டு இன்றுவரை இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.
இந்துக்களின் உபநிடதம் ‘சர்வதர்ம சம பாவ’ என்று அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்துக் கொள்கிறேன். ரிக் வேதம் ‘ஏகம் சத்; விப்ரா பஹுதா வதந்தி’ (கடவுள் ஒருவரே. அவர் பலவழிகளில் பார்க்கப்படுகிறார்) என்று வலியுறுத்துகிறது. இந்துக்களில் மிகப்பெரும் பான்மையினர் மதவெறி இல்லாதவர்கள். மற்ற மதங்களையும் நேசிக்கும் நெஞ்சம் உடைய வர்கள். இதுதான் இந்துக்களின் மதச்சார்பற்ற அரசியலுக்கான அடையாளம்.
‘எவர் நாவால், எவர் கரத்தால் எழிலுறுமோ மனிதகுலம், அவரே சிறந்த முஸ்லிம்’ என்றார் நபிகள் பெருமான். ‘பிறரிடம் அன்பு பாராட்டாமலும், பிறர் அன்புக்குப் பாத்திரமாகாமலும் இருப் பவனிடம் நற்குணங்கள் அமைவதற்கு வாய்ப் பில்லை’ என்றும் அவர் வாய்மலர்ந்தார். ‘வஸ்ஸில் ஹு ஹைர்’ (சமாதானமே சிறந்தது) என்கிறது மார்க்கம் தந்த மறை. பெரும்பான்மை முஸ்லிம்கள் மார்க்க நெறி வழுவாமல் அன்பு ததும்பும் வாழ்வையே நடத்தி வருகின்றனர்.
தன்னுடைய மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயிலில், ‘இந்து மக்களை வருத்தப்படுத்த மாட்டு இறைச்சியை உண்ண வேண்டாம். மக்கள் வணங்கும் இடங்களை நாசப்படுத்த வேண்டாம்’ என்று குறிப்பிட்டார் பாபர். புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் இந்த உயில் இன்றும் உள்ளது. இந்துக்களுக்காக முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்பதும், முஸ்லிம்களுக்காக இந்துக்கள் விட்டுக் கொடுப்பதுமாக ஓர் உயர் கலாசாரம். அதை வளர முடியாமல் தடுக்கும் சக்திகள் இரண்டு. அடிப்படை மதவாதிகளும், ஆதாய அரசியல் நடத்தும் தவறான தலைவர்களும்தான் இன்று இந்தியாவின் பிரச்னை.
‘சாதி மதங்களைப் பாரோம்’ என்றான் பாரதி. ஆனால், சாதியும் மதமும்தான் இங்கு வாக்கு வங்கிகளாக வளர்த்தெடுக்கப்படுகின்றன. இந்திய மக்கள் தொகையில் 20 கோடிக்கும் மேற்பட்டோர் தலித்கள்; 18 கோடிக்கு மேற்பட்டோர் முஸ் லிம்கள். நீண்டகாலமாக, காங்கிரஸ் கட்சி தலித்து களையும், முஸ்லிம்களையும் தன்னுடைய முக்கிய வாக்குவங்கியாக நம்பியிருந்தது. இன்று, இருவருமே பெருமளவில் காங்கிரஸைக் கைவிட்டு விட்டனர். இந்தோனேஷியாவுக்கு அடுத்து உலகில் அதிகமாக இஸ்லாமியர்கள் இந்த மண்ணில்தான் வாழ்கின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களில் 47 விழுக்காடு மக்கள் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் இருக்கின்றனர். அஸ்ஸாம், கேரளா, மகாராஷ்டிரம், கர்நாடகம், ஜார்கண்ட் பகுதிகளில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம். இந்த மாநிலங்களில்தான் வாக்கு வங்கி அரசியலும் அதிகம்.
உத்தரப் பிரதேசத்தில் 3 கோடி முஸ்லிம் மக்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் இவர்கள் 18.5 விழுக்காடு. பீகாரில் 1.5 கோடி முஸ்லிம்கள். இவர்களது வாக்கு சதவிகிதம் 16.5 இந்த வாக்கு வங்கியைக் குறிவைத்துதான் ராகுல், முலாயம், மாயாவதி, லாலு, நிதிஷ்குமார் என்று ஒரு பக்கமும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் ‘மதச்சார்பற்ற’ அரசியலைப் பராமரிக்கிறார்கள். மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரள மாநிலங்களில் நான்கில் ஒரு பங்கு முஸ்லிம்கள் இருப்பதால் அவர்களை மயக்க ‘மதச்சார்பின்மை’ கோஷம் அவசியப்படுகிறது. ‘மதஎதிர்ப்புப் போரை அரசியல் லட்சியமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது பூர்ஷ்வா அராஜகவாதிகளின் வாதம்’ என்றார் லெனின். வீட்டில் உள்ள மதம் வீதிக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்று அடிப்படை மதவாதிகளுக்கும், அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கும் யார் அறிவுறுத்துவது?
மதச்சார்பின்மை என்பது மதத்துக்கோ, கடவுளுக்கோ எதிரானது அல்ல. மதம் தனிநபர் உணர்வு சார்ந்தது. நாட்டின் குடிமகனாக இருக்க எந்தவகையிலும் மதம் ஓர் அளவுகோலாக இருக்க முடியாது. எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பதுதான் உண்மையான மதச்சார்பின்மை. இந்தியா, இந்துநாடாக இருக்கலாகாது என்பதில் காந்தியும், நேருவும், அம்பேத்கரும், அன்றைய பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களும் உறுதியாக இருந்தனர். அதனால்தான், உண்மையான மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட அரசியலமைப்புச் சட்டம் அரங்கேறியது. ‘இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு என்று முகப்புரையில் பறைசாற்றும் நம் அரசியல் சட்டம், சமூக, பொருளாதார, அரசியல் நீதி எண்ணத்தில், வெளிப்படுத்தலில், நம்பிக்கையில், பற்றுறுதியில், வழிபடுதலில் சுதந்திரம், தகுதியிலும் வாய்ப்புரிமையிலும் சமநிலை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. பிரிவு 14 முதல் 21 வரை உள்ள ஷரத்துகளும், 25-வது பிரிவும் அனைவருக்கும் சம உரிமையை சாத்தியமாக்குகின்றன. இந்த அடிப்படை உரிமைகளில் ஆயிரம் மோடிகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்தாலும் கைவைக்க முடியாது. கர்நாடக அரசு அநியாயமாக கலைக்கப்பட்டபோது, அதை எதிர்த்து எஸ்.ஆர்.பொம்மை தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘மதச்சார்பின்மை இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று’ என்பதையும் வலியுறுத்துகிறது. இன்று ‘மதச் சார்பின்மை’ என்பது காங்கிரஸ் போன்ற சில கட்சிகளால் மக்களை ஏமாற்றும் ஓர் அரசியல் சொல்லாடலாக ஆக்கப்பட்டுவிட்டது.
பா.ஜ.க. தன்னுடைய பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தவுடன் மதச்சார்பின்மை ஆயுதத்தைக் கொண்டே களத்தில் அவரைப் புறங்காண முடியும் என்ற பூரிப்பில் காங்கிரஸும் இடதுசாரிகளும் தங்கள் பரிவாரங்களுடன் புறப்பட்டு விட்டன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மன்னிக்க முடியாத 9 ஆண்டு கால ஆட்சித் தவறுகளையும், அருவருப்பான ஊழல்களையும் ஆரோக்கியமான அரசியல் மாற்றங்களை விரும்பும் எந்த வாக்காளராலும் எளிதாக மறக்க முடியாது. தன்னலமற்ற, இனநலனுக்காக எந்த இழப்பையும் ஏற்கத் தயங்காத, உண்மையான பெரியார் தொண்டர் தோழர் கொளத்தூர் மணியின் எந்தக் கேள்வியையும் என்னால் மறுக்க முடியாது. ஆனால், அவரிடம் கேட்க சில நியாயமான சந்தேகங்கள் உள்ளன.
காங்கிரஸைப் போல் பா.ஜ.க-வின் மீதும் ஊழல் கறை உண்டு. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பொருளாதார அயலுறவுக் கொள்கைகளில் பெரிய வேறுபாடு இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் பகடைக் காய்களாக இரு கட்சிகளும் உருட்டப்படுவதும் உண்மை. இரண்டுமே வேண்டாம். ஆனால், இடது சாரிகளிடம் கூட்டிப் பார்த்தால் தேசிய அளவில் 8 விழுக்காடு வாக்குகளுக்கும் வழியில்லை. மாநிலங்களில் வலிமையோடு திகழும் கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியமைக்க இடதுசாரிகள் முயன்றால் தவறில்லை. உ.பி-யில் மாயாவதியும் முலாயமும் ஓரணியில் நிற்பார்களா? பீகாரில் லாலுவும் நிதிஷ்குமாரும் நேசக்கரம் நீட்டுவார்களா? மே.வங்கத்தில் மம்தாவுடன் பிரகாஷ் கரத்தும் யெச்சூரியும் கை குலுக்குவார்களா? ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டியும் சந்திரபாபு நாயுடுவும் சமரசம் கொள்வார்களா? தமிழகத்தில் ஜெயலலிதாவும் கலைஞரும் பாசமொழி பேசுவார்களா? வானத்துத் தேவர்களை வைத்தா மூன்றாவது அணியமைக்க முடியும்? அப்படியானால், ‘ஊழல் எப்போதும் தொடர்கதைதான்; முடிவே இல்லாதது’ என்று பாடியபடி காங்கிரஸ் தலைமையிடமே ‘மதச்சார்பின்மை’ அரி தாரத்தில் மதிமயங்கி மீண்டும் ஆட்சியைப் பரிசுப் பொருளாய் அளித்துவிட வேண்டியதுதானா?
மோடியின் ஆட்சியில் 2002-ல் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம் சமுதாயப் படுகொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், குஜராத் கல வரத்தை மறக்காதவர்கள் 1984-ல் டெல்லியில் சீக் கியர்களுக்கு எதிராக ஊழிக்கூத்தை நடத்திய காங்கிரஸ் கலவரத்தை மட்டும் ஏன் வசதியாக மறந்து விடுகிறார்கள்? இந்த மறதிக்குப் பெயர்தான் மதச்சார்பின்மையா?
1984-ல் காங்கிரஸ் திட்டமிட்டு நடத்திய சீக்கியர் படுகொலைச் சம்பவத்தில் 3,874 பேர் கொல்லப்பட்டதாகவும், 131 சீக்கிய குருத் வாராக்கள் தகர்க்கப்பட்டதாகவும், இந்தச் செயலில் காங்கிரஸ் தொண்டர்களும், ஆதரவாளர்களும் ஈடுபட்டதாகவும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தெரிவித்ததே… அது ஏன் யாருக்கும் நினைவில் இல்லை? டெல்லி கலவரத்தை நினைவுகூர்வதன் மூலம் குஜராத் கலவரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. தான் நேரடியாக ஈடுபடவில்லை என்று மோடி மறுத்தாலும், அவரது ஆட்சியில் நிகழ்ந்த அந்த அநாகரிகப் படுகொலைகளுக்கு அவர் பொறுப் பேற்றாக வேண்டும். ‘இந்தப் பாவத்தை வாழ்நாளில் இன்னொரு முறை நான் செய்யமாட்டேன்’ என்று முஸ்லிம் சமு தாயத்திடம் மோடி மன்னிப்பை வேண் டுவதுதான் நியாயம். பல்வேறுபட்ட சமயங்களைக் கொண்ட இந்தியாவின் பிர தமர் நாற்காலியில் அமர அப்போதுதான் மோடிக்கு முழுத்தகுதி வாய்க்கும்.
காங்கிரஸ் கூட்டணி இந்த மண்ணில் புறக் கணிக்கப்பட வேண்டும் என்பதும், இரண்டு சுயநல திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்பதும் என்னுடைய லட் சியம். இந்த லட்சியம் நிறைவேற இடதுசாரிகள் முயற்சியில் ஓர்அணி அமையாத நிலையில், பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க முயன்றால் வரவேற்பேன். குஜராத் கலவரத்தின்போது பா.ஜ.க-வுடன் மத்திய அரசில் அமர்ந்திருந்தவர்தான் கலைஞர். கலவரத்துக்குப் பிறகு, 2004-ல் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தவர்தான் ஜெயலலிதா. மருத்துவர் ராமதாஸும், வைகோவும் முன்பே பா.ஜ.க அணியில் இடம் பெற்றவர்கள்தான். அப்போதெல்லாம் பொங்கி எழாதவர்கள் இப்போது என்மீது எரிசலுறுவது ஏன்? ஹிட்லருடன் நேதாஜி நேசக்கரம் நீட்டியபோது, ”ஜெர்மனியும், இத்தாலியும், ஜப்பானும் என்ன செய்கின்றன என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. என் கவலை முழுவதும் இந்தியா…இந்தியா மட்டுமே…” என்றார். அதையே நான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன்.
3 Comments
Aravind John Khan
அருமையான பதிவு. . காந்திய மக்கள் இயக்கம் மீது முஸ்லீம்களுக்கு நல்லென்னம் உண்டு. . அதை சீர்குலைக்கும் வகையில் , தமிழின துரோகி, சிறுபான்மையினரின் எதிரிகள் பா.ஜ.க(ஆர்.எஸ்.எஸ்) இன் பிரதம வேட்பாளர் நரபலி மோடியை பற்றி புகழாரம் சூட்டுவதும்,ு ஆதரவு கொடுப்பதும் நல்லதல்ல. . இதை தவிர்க்கவும் . . நன்றி தலைவரே. . ்
mayilmurugan
nandraga sonergal
mayilmurugan
viko real hero