பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் மாணவர் சமூகம் போராட்ட உணர்வுடன் வீதிகளில் வந்து நின்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவ மாணவியரும், இளைஞர்களும் மதுவுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காந்திய மக்கள் இயக்கம் 18 லட்சம் கையொப்பங்களை அவர்களிடம் பெற்று அரசிடம் சமர்ப்பித்தது. வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்றுத் திட்டத்தையும் முன்வைத்தது. ஆனால் இந்த அரசு அதை விழிதிறந்தும் பார்க்கவில்லை; செவியுற்றும் கேட்கவில்லை.
அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நடைபெறுகின்றன என்று இந்த அரசு குறை கூறலாம். ஆனால், மாணவர் சமூகத்திற்கு மக்கள் நலனைத் தவிர வேறெந்த அரசியல் நோக்கமும், அதிகார வேட்கையும் இருப்பதற்கு வழியில்லை. 1965-ல் தமிழைக் காப்பதற்காக மாணவர்கள் வீதிக்கு வந்தனர். அவர்களுடைய உணர்வைப் பொருட்படுத்தாமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்ட காங்கிரஸ் அரசு 1967-ல் வீழ்ந்தது. அன்று வீழ்ந்த காங்கிரஸ் கட்சி இன்று வரை எழவேயில்லை.
மாணவர் சமுதாயம் இன்று மதுவுக்கு எதிராக மிகப்பெரிய சமூக நோக்குடன் போராட்டக்களத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. படிப்பதற்கான கல்விக்கூடங்களை மூடிவிட்டு, குடிப்பதற்கான டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்து, தார்மிகப் பொறுப்பற்ற இந்த அரசு மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்திருக்கிறது. மாணவியரிடம் தரம் தாழ்ந்து காவல்துறை தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. இனி மதுவுக்கு எதிரான போராட்டத்தை இந்த அரசால் எந்த அடக்குமுறை மூலமும் தடுத்து நிறுத்த முடியாது.
மக்கள் எதிர்பார்ப்புக்கு மதிப்பளித்து மராட்டிய மாநில அரசு நான்கு மாவட்டங்களில் மதுக்கடைகளை முற்றாக மூடிவிட்டது. நிலைமையின் தீவிரத்தை இனியாவது முழுமையாக உணர்ந்து முதல்வர் ஜெயலலிதா முதற்கட்டமாக டாஸ்மாக் கடை நேரத்தை நான்கு மணி நேரமாகக் குறைக்கவேண்டும். எலைட் பார்கள் திறக்கும் முடிவைக் கைவிடவேண்டும். 25 வயதுக்குட்பட்டோருக்கு மது வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும். 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்குள் மதுவற்ற மாநிலம் மலர்வதற்குரிய நடவடிக்கைகளில் தீவிரமாக முதல்வர் ஜெயலலிதா ஈடுபடவேண்டும்.
‘ஊமைச்சனங்களும் செவிட்டு அரசும் ஜனநாயகத்திற்கு எதிரானவை’ என்றார் இராஜாஜி. ஊமைச்சனங்கள் இன்று விழிப்புற்று மதுவுக்கு எதிராக உரத்த குரலில் முழக்கமிடுகின்றனர். செவிட்டு அரசுக்கு அந்தக் குரல் கேட்கவில்லை என்றால் ஆட்சி பீடத்திலிருந்து அ.தி.மு.க., வெளியேற்றப்படும் நிலை வரும். மதுவால் தன்னுடைய ஆட்சியை இழந்து, மதுவைக் கொண்டு வந்த கருணாநிதியின் பரிவாரம் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்குப் பாதை வகுக்கப் போகிறாரா ஜெயலலிதா.