தமிழகத்தில் புதிய அரசியல் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் காரியங்களை தமிழருவி மணியன் தொடங்கி இருக்கிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவரான மணியன், ‘அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியை உருவாக்கப் போகிறேன்’ என்று களம் இறங்கி உள்ளார். அதற்கான முதல் கூட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் திருப்பூரில் கூட இருக்கிறது.
ஜனவரி 7-ம் தேதி கூடும் அந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை ஒரே மேடையில் பேசவைக்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழருவி மணியனை சந்தித்தோம்.
”ஜெயலலிதா ஆட்சி அமைந்து ஆறு மாதங்களே கடந்துள்ள நிலையில், மாற்றாக ஓர் அணியை உருவாக்க வேண்டிய அவசர அவசியம் என்ன?”
”தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, என் எழுத்தையும் பேச்சையும் பயன்படுத்தினேன் என்பதைவிட… மக்கள் விரோத ஊழல் நிறைந்த தி.மு.க. ஆட்சியை, எந்த அரசியல் நெறிமுறைக்கும் உட்படாத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். அதற்கு 30 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ள அ.தி.மு.க-வை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம். பெரிய தீமையை அகற்ற சிறிய தீமையுடன் சமரசம் செய்ய வேண்டி இருக்கிறது. ஜெயலலிதா எவ்வித மாற்றத்துக்கும் உட்படாதவர் என்பதைத் தேர்தலுக்கு முன்பே நான் சொல்லி இருக்கிறேன். சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகள், சாகும் வரை எப்படி மறையாதோ, அதைப் போல ஜெயலலிதாவின் பண்பு நலன்கள் இறுதிவரை மறையாது. ‘சசிகலா என்கிற இரும்புக் குண்டைக் காலில் கட்டிக்கொண்டு இருக்கும் ஜெயலலிதாவால் நேர்மையாகவும் உண்மையாகவும் வேகமாகவும் செயல்பட முடியாது’ என்று முன்பு எழுதினேன். இப்போது சசிகலா வட்டாரம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு இது மட்டுமே போதாது என்பதால், இந்த மாற்று அணிக்கான முயற்சியில் இறங்கி உள்ளேன்!”
”அது எப்படி சாத்தியம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?”
”அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்தும், அரசின் தவறான நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தியும், ஒரே மேடையில் தொடர்ந்து ஓர் அணியில் நின்று போராட, அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத கட்சிகள் முன்வர வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ. முதலில், ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள் பொதுத்திட்டத்தின் அடிப்படையில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து போராட வேண்டும். இந்த அணி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத அணி. ஊழல் மலிந்த கட்சிகளுக்கு மாற்றாக இவர்களால் இருக்க முடியும். மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
ஜனவரி 7-ம் தேதி எங்கள் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா, தமிழக அரசியலில் மாற்று அணியை உருவாக்கும் கால்கோள் விழாவாக நடத்தப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உட்பட்ட கட்சிகள் இந்த மாற்று அணியை இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும்.”
”உங்களுக்கு முன்பே பா.ம.க. மாற்று அணி கருத்தைச் சொல்லி இருக்கிறதே?”
”பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக வளர்ந்து ஒரு குடும்பத்தின் நலன் காக்கும் சாதாரணக் கட்சித் தலைமையாக அது சரிந்து விட்டது.
மருத்துவர் ராமதாஸின் அறிக்கைகளில் உள்ள சமுதாய உணர்வு, அவரின் கட்சியில் அவர் காட்டும் அணுகுமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் அரங்கில் நம்பகத்தன்மையை இழந்து விட்டவர் ராமதாஸ். எனவே, பா.ம.க. தலைமையில் அணி அமைந்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பார்வையற்றவர் தடியை ஊன்றி, எவரெஸ்ட் சிகரம் ஏறிவிட முடியும் என்பதைப் போலத்தான்.”
”மாற்று அணியில் விஜயகாந்துக்கு இடம் இருக்கிறதா?”
”இரண்டு பெரிய கட்சிகளிலும் இடம் இல்லாதவர்கள் எல்லாம் முக்கியத்துவம் தேடி வந்து சேர்ந்த இடம்தான் தே.மு.தி.க. விஜயகாந்தின் மனைவியும் மைத்துனரும்தான் அந்தக் கட்சியின் விதியை நிர்ணயிக்கிறார்கள். போஸ்டர், கட் அவுட் வைப்பதில் இருந்து, துதி பாடுவது வரை இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இவர்கள், எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை. அது, எந்த சித்தாந்தத்தாலும் கட்டப்பட்ட கட்சி அல்ல. விஜயகாந்த் எனும் மனிதரின் விளம்பரத்தில் மட்டும் குளிர் காயும் அந்தக் கட்சி, இதுவரை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் இயங்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பாதிக்கக்கூடிய முல்லைப் பெரியாறு பிரச்னையில் சட்டமன்றத் தீர்மானம் இயற்றும் கூட்டத்துக்குக்கூட, மிகத்தாமதமாக வந்த ஒரே தலைவர் விஜயகாந்த். இந்த ஒரு சம்பவமே அவருடைய பொறுப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது. தே.மு.தி.க. என்பது மின்னலைப் போல் தோன்றி புயலைப் போல மறையக்கூடிய ஓர் அரசியல் கட்சி.”
”வைகோவை அதிகப்படியாக முன்னிறுத்துகிறீர்களே?”
”அகத்திலும் புறத்திலும் தூய்மையான ஒரு மனிதனே ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அந்த இடத்தில் வைகோவைத் தவிர வேறு ஒருவரையும் வைத்துப் பார்க்க முடியவில்லை. அதற்காகத்தான் அவரை மாற்றுத் தலைவராக முன்னிறுத்துகிறேனே தவிர, நான் ம.தி.மு.க-வின் கொள்கைப் பிரச்சாரகனும் இல்லை. எந்தத் தனிமனிதனையும் துதிபாடி வயிறு வளர்க்க வேண்டிய நிலையிலும் நான் இல்லை!”
– இரா. தமிழ்க்கனல்,
படம்: வி.செந்தில்குமார்