ஜீனியர் விகடன் 07 01 2018
புத்தாண்டில், ஒட்டுமொத்த இந்திய அரசியல் அரங்கையே அதிரவைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ‘ஆன்மிக அரசியல், காவலர் படை’ எனத் தனது அரசியல் பிரவேச அறிவிப்பிலேயே ‘புதிய பாதை’யைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் ஆலோசனை குருவாகக் கருதப்படும் ‘காந்திய மக்கள் இயக்க’த் தலைவர் தமிழருவி மணியனைச் சந்தித்தோம். ‘‘நான் யாருக்கும் ஆலோசனை வழங்கும் இடத்திலோ, அறிவுரை கொடுக்கும் இடத்திலோ இல்லை. ரஜினியின் நெஞ்சுக்கு நெருக்கமான தோழன்தானே தவிர, நான் யாருக்கும் ‘குரு’ கிடையாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் ரஜினியின் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கமும் அவருடன் கைகோத்து நடக்கும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை’’ என்று சொல்லிவிட்டு நம் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார்.
‘‘அரசியலுக்குள் வந்துவிட்டபிறகு, ‘போராட வேண்டாம்’ என்று ரஜினி சொல்வது எந்த அளவுக்குச் சரியானதாக இருக்கும்?’’
‘‘பிரச்னைகளை முன்வைத்து அறிக்கைகள் விடுவதும், களத்தில் போய் நின்று வெறுமனே எதிராகக் குரல் கொடுப்பதுமான வழக்கமான அரசியல் கட்சியாக இயங்க ரஜினி விரும்பவில்லை. ‘சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்; செய்வதற்கு ஒரு மனிதன்தான் தேவை’ என்பது அவரின் எண்ணம். அறிக்கை விடுவதும், குரல் கொடுப்பதும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட மிகச்சிறந்த வழிமுறைகள். எனவே, அவற்றை அவர் குறைகூறவில்லை. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அணுகுமுறை இருக்கிறது. அந்த வகையில், தன்மீது நம்பிக்கைக் கொண்ட மக்களுக்காக ஆக்கபூர்வமான செயல்களைச் செய்துகாட்டுவதை மட்டுமே தனது குறிக்கோளாகக் கொண்டு அவர் அரசியல் களத்தில் இறங்குகிறார். அதனால்தான், ‘நான் சொன்னதைச் செய்கிறேனா இல்லையா என்று மூன்று ஆண்டுகள் பாருங்கள். செய்யத் தவறினால், நானாகவே விலகிக்கொள்கிறேன்’ என்கிறார். இது அவருடைய அணுகுமுறை… அவ்வளவுதான்!’’
‘‘ரஜினி, ‘தொண்டர்கள் தேவையில்லை… காவலர்கள்தான் எனக்கு வேண்டும்’ என்கிறாரே?’’
‘‘அரசியல் கட்சிகளுக்கான சுவரொட்டி ஒட்டவும், மேடை போடவும், கோஷம் போடவும் மட்டுமே தொண்டர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ‘இதுபோன்ற தொண்டர்கள் எனக்குத் தேவையில்லை’ என்பதுதான் ரஜினியின் விருப்பமாக இருக்கிறது. மக்களின் குறைகளைக் கண்டறியக் கூடியவர்களாகவும், தவறு செய்வோரை இனம் காட்டுவோராகவும், நெறி சார்ந்த அரசியல் – நேர்மையான ஆட்சி – வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை வளர்த்தெடுப் போருமான காவலர்கள்தான் தனக்கு வேண்டுமென அவர் குறிப்பிடுகிறார். புரையோடிக் கிடக்கும் இன்றைய அரசியலில், ரஜினிகாந்த் ஏற்படுத்தியிருக்கும் புதுமை என்றே இதை நான் கருதுகிறேன்.’’
‘‘அரசியலுக்கு வருபவர் கட்சியை ஆரம்பிப்பதற்கான முயற்சியைத் தவிர்த்து விட்டு, ரசிகர் மன்றங்களை பலப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கிறாரே… ஏன்?’’
‘‘தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 65 ஆயிரம் வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. அந்த வாக்குச் சாவடிகள் அனைத்திலும் போய் உட்கார்ந்து பார்வையிடக்கூடிய அளவுக்குத் தொண்டர் பலம் உள்ள கட்சிகள் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மட்டும்தான். அசுரத்தனமான பணபலம் வாய்ந்த கட்சிகளும், இவை மட்டும்தான். இந்தக் கட்சிகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு மாற்று அரசியலை வளர்த்தெடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதை ரஜினிகாந்த் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதனால்தான், இந்த அடிப்படைக் கட்டுமானத்தைத் தனது கட்சிக்கு உடனடியாக உருவாக்கும் எண்ணத்துடன் அவர் செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில், ஒரு வாக்குச் சாவடிக்கு 10 பேர் என்று வைத்துக்கொண்டாலும்கூட, மொத்தம் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் தேவை. அவர்களை உருவாக்குவதுதான், புதிய கட்சிக்கு அடிப்படைக் கட்டமைப்பாக இருக்கமுடியும். காலம் காலமாக தனக்காக உழைக்கக்கூடிய, தனது மன்றங்களில் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுதான் அவர் இந்த அமைப்பை உருவாக்க முடியும். அதனால், ஓர் ஆரம்பப் புள்ளியாக இந்தச் செயலை அவர் தொடங்குகிறார்.’’
‘‘பகுத்தறிவுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தமிழக அரசியல் களத்தில், ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ முழக்கத்துக்கு அர்த்தம் என்ன?’’
‘‘ரஜினியிடம் நான் எதிர்பார்ப்பதும், இந்த மண்ணில் மலர வேண்டியதும் ‘ஆன்மிக அரசியல்’தான்! சுதந்திரப் போராட்டச் சூழலிலேயே மகாத்மா காந்தி முன்வைத்தது ஆன்மிகம் சார்ந்த அரசியல்தான்.
‘நான் மதம் குறித்துப் பேசவில்லை; நான் ஓர் ஆன்மிக வாதி’ என்று தனது அறிவிப்பிலேயே ரஜினி தெளிவாகச் சொல்லி விட்டார். ஆன்மிகம் வேறு, மதம் வேறு. ஆனாலும்கூட, தவறான புரிதலுடன் ‘பி.ஜே.பி-யின் பின்புலத்துடன் ரஜினி வருகிறார்; மதவாதக் கட்சி’ என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். சாதி, மதம் சார்ந்து மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துகிற அரசியல்தான் இன்றைக்கு இங்கே நடந்துகொண்டிருக்கிறது; இது வெறுப்பு அரசியல். இது மக்களைப் பிரிப்பதற்குதான் பயன்படும். ஆனால், ஆன்மிக அரசியல் என்பது மக்களை இணைக்கும். ஆன்மிகம் என்பது மதம் அல்ல. உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் பேதமற்று அன்பு செலுத்தி, ஆரத்தழுவி அரவணைத்துக்கொள்கிற மனம் எவனுக்கு இருக்கிறதோ…. அவன்தான் ஆன்மிகவாதி! எனவே, சாதி – மதம் கடந்து ஒட்டுமொத்த மக்களுமே ரஜினிகாந்த்தை ஆரத்தழுவி வரவேற்க வேண்டும்.’’
‘‘சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசும் ரஜினிகாந்த், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தோ, மத்திய பி.ஜே.பி அரசின் நடவடிக்கைகள் குறித்தோ கருத்துத் தெரிவிக்கவில்லையே?’’
‘‘சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இவை இரண்டில் எது முதலில் வரும் என்று யாராலும் சத்தியம் செய்து கூற முடியாது. தமிழகமும், தமிழக மக்கள் நலனும்தான் ரஜினிகாந்த் மனதில் முன்நிற்கின்றன. ஊழலற்ற ஆட்சியும் வெளிப்படையான நிர்வாகமும்தான் அவரது குறிக்கோள்கள். அந்த வகையில், இன்னொரு காமராஜர் ஆட்சியை மீட்டெடுப்பதுதான் ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் அடித்தளம். எனவே, தமிழர் நலன் என்ற நோக்கத்துடன், சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து காய் நகர்த்துகிறார் ரஜினிகாந்த்… அவ்வளவுதான்.’’
‘‘தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் ஒழித்துக்கட்டுவதற்காகத்தான் ரஜினியை தமிழருவி மணியன் ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?’’
‘‘தி.மு.க என்ன செய்ததோ, அதையேதான் அ.தி.மு.க-வும் செய்கிறது. அதனால்தான் ‘இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று காமராஜர் சொன்னார். எனவே, காமராஜரின் தொண்டனாக இந்த இரண்டு ஊழல் கட்சிகளிடமிருந்தும் தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தவம். அதற்கான காலம் எப்போது கனியும் என்ற எனது தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும் போதுதான், ‘சிஸ்டம்’ குறித்து ரஜினிகாந்த் பேசுகிறார்; ‘போருக்குத் தயாராகுங்கள்’ என்கிறார். ஒரு மாற்று அரசியலை வளர்த்தெடுப்பதற்கான முயற்சியில் ரஜினி இருக்கிறார் என்பதை அறிந்து அவருடன் போய் நான் சேர்ந்து நிற்கிறேனே தவிர…. நான் அவரை அழைத்துக்கொண்டு வரவில்லை; என் இழுப்புக்கு அவர் வந்து சேரவுமில்லை.’’
‘‘இன்றைய சூழலில், ரஜினியின் அரசியல் பிரவேசம் தி.மு.க-வைப் பலவீனப்படுத்துவதற்கானதா?’’
‘‘அ.தி.மு.க என்பது திராவிட இயக்கமே கிடையாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தி.மு.க என்பது பெரியார் கொள்கைகளிலிருந்து விலகி, அரசியல் களத்தில் வெற்றிகளைப் பெறுவதற் காகவே ஆயிரம் சமரசங்களை செய்துகொண்ட கட்சி. ‘குற்றவாளி’ என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவை, தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள், இன்னமும் குற்றவாளியாகவே கருதவில்லை. ஆனால், ‘நிரபராதி’ என்று விடுவிக்கப்பட்ட கனிமொழியையும் ஆ.ராசாவையும் நிரபராதிகள் என்று பெரும்பான்மைத் தமிழர்கள் நம்பவில்லை. நாளையே தி.மு.க ஆட்சிக்கு வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டாலினைச் சூழ்ந்து நின்றுகொண்டிருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களான துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஆ.ராசா இவர்களெல்லாம் யார்? இவர்கள் அத்தனைபேரும் 50 வருடங்களுக்கு முன்பு வைத்திருந்த சொத்துவிவரம் என்ன? இன்றைக்குக் கோடி கோடியாக சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறார்களே…. எந்தத் தொழிலைச் செய்து இந்தக் கோடிகளைக் குவித்தார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள்? ஸ்டாலினே இன்றைக்கு ஓர் இளவரசர்போல வலம் வருகிறாரே… இவையெல்லாம் எப்படி வந்தன? இப்படிப்பட்ட தி.மு.க-வே நாளையும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், ஊழலற்ற ஆட்சியைத் தருமா?
‘எம்.ஜி.ஆரா – கருணாநிதியா’ என்ற நிலை மாறி ‘கருணாநிதியா – ஜெயலலிதாவா’ என்ற நிலை இருந்து வந்தது. இன்றைக்கு ஜெயலலிதாவைக் காலம் கவர்ந்துவிட்டது. வயோதிகம் காரணமாக கருணாநிதியும் செயலற்று விட்டார். 50 ஆண்டு காலம் பொது வாழ்வை சுயநலத்துக்காகவே பயன்படுத்திப் பாழ்படுத்திவிட்ட மனிதர்களிட மிருந்து, இந்த இடைவெளியிலாவது தமிழகம் விடுபட வேண்டும் என்று சொல்கிறேன். இதனால் தமிழருவி மணியனுக்கு என்ன லாபம்?’’
‘‘தமிழருவி மணியன் தனது சுயநலத் தேவைகளுக்காக ஆதாயம் பெற்றே ரஜினியை ஆதரிக்கிறார் என்கிறார்களே?”
‘‘ஆமாம்… ரஜினிகாந்திடம் நான் ஆதாயம் பெற்றுக்கொண்டது உண்மைதான். ஒவ்வொன்றுக்கும் எதிர்வினை ஆற்றுவதும், விமர்சனம் செய்வதும், விவாதங்களில் ஈடுபடுவதுமாக இதுவரை இருந்த அரசியலிலிருந்து முற்றாக விலகி, பேசுவதைக் குறைத்து மக்களுக்காக செயல்படுவது ஒன்றே நல் அரசியலாக இருக்கும் என்பதை எனக்கு உணர்த்தியவர் ரஜினிகாந்த்! இந்த ஒன்றை அவரிடமிருந்து நான் பெற்றுக் கொண்டது உண்மை!’’
– த.கதிரவன்