தமிழகத்தில் நீடிக்கும் மின்வெட்டு பிரச்னைக்கு காங்கிரஸ், திமுக கூட்டுச் சதி தான் காரணம் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் ” தமிழருவி மணியன் ” குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் நிருபர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது: தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை தவிர்க்க மத்திய அரசு எந்தவிதத்திலும் உதவ முன்வரவில்லை. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் உற்பத்தியாகும் 2 ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரத்தில் 47 சதவீதம் தமிழகத்துக்கும், அதில் 53 சதவீதம் கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
அதேசமயம், ஆந்திரத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அந்த மாநிலத்தில் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீங்கும் வரை நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு அளிக்க மத்திய அரசு மறுக்கிறது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதி, இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தவில்லை. தமிழகம் இருளில் மூழ்கிக் கிடந்தால்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பாளர்கள் என அரசியல் லாபத்துக்காக மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார் கருணாநிதி. காங்கிரஸ், திமுக கூட்டுச் சதி தான் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீடிப்பதற்குக் காரணம் என்பதை மக்கள் மத்தியில் காந்திய மக்கள் இயக்கம் பிரசாரம் செய்ய உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இக் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
நன்றி : தினமணி