சென்னை, பிப். 13–
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜனதா தலைமையில் ஒரு மாற்று அணியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்.
மக்கள் தேசிய கட்சியின் முதலாம் ஆண்டுவிழா நேற்று சைதாப்பேட்டையில் நிறுவன தலைவர் சேம.நாராயணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழருவி மணியன் பேசியதாவது:–
தமிழகத்தில் 1967–ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காமராஜர் ஆட்சி காலத்தில் ஒரு அமைச்சர் கூட ஒரு செப்புகாசு எடுத்ததாக புகார் கிடையாது. ஊழல் இல்லாத ஆட்சி காங்கிரஸ் ஆட்சி. நான் சொல்வது இந்த கால காங்கிரசை அல்ல. அந்த கால காங்கிரசை.
இப்போதைய காங்கிரஸ் லிமிடெட் கம்பெனியாகி விட்டது. சோனியா குடும்ப நலனை பாதுகாக்கும் துதிபாடிகளின் கூடாரம் ஆகிவிட்டது. அதனால் தான் காமராஜர் 43 சதவீத ஓட்டு வங்கியுடன் விட்டு சென்ற காங்கிரஸ் இன்று தேய்ந்து 4 சதவீதமாகி விட்டது.
தமிழகத்தின் பண்பாட்டை படுகுழியில் தள்ளிவிட்ட அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க பாராளுமன்ற தேர்தலின் போது முயற்சித்தேன்.
மோடி பிரதமர் ஆகும் சூழல் உருவானது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று ராமதாஸ் அறிவித்தார். பா.ஜனதா தனிமையில் வீதியில் நின்றது. தே.மு.தி.க.வும் தயாராக இருந்தது. அதை பயன்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்கினேன். அந்த கூட்டணி 2016 தேர்தலில் மாற்று சக்தியாக உருவெடுக்க முடியும் என்று கணக்கு போட்டேன். ஆனால் அந்த அணி இப்போது இல்லை.
அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் ஊழலில் திளைத்து போன கட்சிகள். அந்த கட்சிகளில் இருப்பவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சொத்து விபரத்தையும் இப்போதைய சொத்து விபரத்தையும் வெளியிட தயாரா?
ஸ்ரீரங்கம் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக எதிர்கட்சிகள் ஒன்றாக நின்று இருக்கலாமே? ஏன் முடியவில்லை. ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் முதல்வர் ஆசை வந்து விட்டது. நீலக்கண்ணாடி முன்பு நின்று முதல்வராக மகுடம் சூடி அழகு பார்க்கிறார்கள்.
இதே நிலை நீடித்தால் 2016 தேர்தலிலும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிதான் வரும். அமைப்பு ரீதியாக பலமாக இருக்கும் அந்த கட்சியின் தொண்டர்கள் கைவிட மாட்டார்கள்.
அந்த கட்சியை வீழ்த்த சரியான எதிர்கட்சி வேண்டும். அந்த தகுதி தி.மு.க.விடம் இல்லை. மாற்றத்தை உருவாக்க சிதறி கிடக்கும் கட்சிகள் ஒன்று சேர வேண்டும். நான்தான் முதல்வர் வேட்பாளர் என்ற மனநோயில் இருந்து விடுபடுங்கள்.
விதை அழிந்தால்தான் மரம், நீர்த்துளி அடையாளத்தை இழந்தால்தான் கடல். கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அடையாளத்தை வைத்து கொண்டு சமூகத்தை பற்றி நினைக்காவிட்டால் எப்படி மாற்று அரசியல் மலரும்? மாற்று அரசியலை பற்றி யோசியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பாவலர் கணபதி, வக்கீல் கோவிந்த சாமி, ஐக்கிய ஜனதாதள பொது செயலாளர் ராஜ கோபால், தனசேகரன், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Source : Malaimalar