சென்னை: சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்தித்துப் பிடரைப் பிடித்து உலுக்கிய சாதனையை அரவிந்த் கெஜ்ரிவால் அரங்கேற்றியிருக்கிறார் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றிக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வெற்றி இந்திய அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். எவ்வளவு வலிமை மிக்க ஆதிக்க சக்தியாக இருந்தாலும் மக்கள் நினைத்தால் எளிதாகத் தூக்கி எறிவார்கள் என்பதையே இத் தேர்தல் முடிவு உறுதிப் படுத்தியுள்ளது.
ஆடைக்கவர்ச்சி
பிரதமர் மோடியின் ஆடைக் கவர்ச்சியும், அலங்காரப் பேச்சும் , ஆட்சியதிகாரமும், கார்ப்ரேட் நிறுவனங்களின் பின்புலமும், அமித்ஷாவின் அரசியல் உத்திகளும் மக்கள் சக்திக்கு முன்னால் செல்வாக்கு இழந்து செயலற்றுப் போய் விட்டதையே ஆம் ஆத்மியின் வெற்றி வெளிப்படுத்தியிருக்கிறது.
இமாலய வெற்றி
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த கரிசனமும், குடிநீர் மின்சாரம் ஆகிய அத்தியாவசியத் தேவைகள் வெகு மக்களுக்கும் சென்று சேர்வதில் மேற்கொண்ட ஆக்கப் பூர்வமான அக்கறையும், ஒவ்வொரு குடிமகனையும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் மோசமாகப் பாதிக்கும் ஊழல் முறைகேடுகளைக் களைந்தெறிவதில் காட்டிய மன உறுதியும், ஜும்மா மசூதி இமாம் வெளிப்படையாக அறிவித்த ஆதரவை அரசியல் ஆண்மையுடன் மறுதலித்த உண்மையான மதச் சார்பின்மையும் சேர்ந்து ஆம் ஆத்மிக்கு இமாலய வெற்றியைத் தந்திருக்கின்றன.
சிங்கத்தின் குகையில்
சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்தித்துப் பிடரைப் பிடித்து உலுக்கிய சாதனையை அரவிந்த் கெஜ்ரிவால் அரங்கேற்றியிருக்கிறார். பரிதாப தோல்வி கார்ப்ரேட் நிறுவனங்களின் நலன்களையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வளர்த்தெடுக்க விரும்பும் இந்துத்வா வகுப்புவாத செயல்முறைகளையும் நடைமுறைப் படுத்துவதில் தான் மோடியின் அரசுக்கு உண்மையாக ஈடுபாடு இருப்பதை டெல்லி மக்கள் மிக விரைவில் புரிந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.க.விற்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தவர்கள் இன்று மிகப் பரிதாபகரமான தோல்வியை பரிசாகத் தந்திருக்கின்றனர்.
Thanks : Thatstamil Oneindia.com