ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ள கல்விக்கடன் வசூல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
(இன்று 17 07 அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை)
தரமான கல்வியை இலவசமாகத் தரவில்லை; படித்து முடித்த பின் உரிய வேலை வாய்ப்பிற்கான சூழலையும் உருவாக்கவில்லை. ஆனால் கடனை மட்டும் திருப்பித்தர நெருக்கடி. வழி தெரியாத மதுரை மாணவர் லெனின், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
சாமான்யர்கள் சட்டத்தைக் காட்டி நெருக்குதலுக்கு உட்படுத்தப்படுவதும், சக்தியுடையோர் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பி பறந்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டன. இத்தகைய மாபாதகச் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; லெனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், இலவசத் திட்டங்களை நிறைவேற்றக் காட்டும் முனைப்போடு தேர்தல் வாக்குறுதியாகத் தந்த கல்விக் கடன் ரத்து செய்தலை, நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவரையில், கல்விக் கடன் வசூல் செய்யும் அடாவடி நடவடிக்கைகளை, மத்திய நிதி அமைச்சகம் நிறுத்தி வைக்க வேண்டும். குறிப்பாகத் தான் வாங்கிய கடன்களை திரும்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ள கல்விக்கடன் வசூல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.