சு.அருளாளன், வந்தவாசி.
”நீங்கள் நடத்திய அதிரடி ரெய்டுகள் பற்றிச் சொல்லுங்களேன்?”
”பல ரெய்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தாலும், காஞ்சிபுரத்தில் 1999 அக்டோபர் மாதத்தில் உலகின் மிகப் பெரிய பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்தின் மீது நான் எடுத்த நடவடிக்கை குறிப்பிடத்தகுந்தது. மதுராந்தகம் வட்டம், மாமண்டூரில் இயங்கிய இந்தக் குளிர்பான ஆலையின் தயாரிப்பு மிக மோசமாக இருந்தது என்று நுகர்வோர் அமைப்பைச் சார்ந்த சம்பத் முதலியார் என்பவரது மனுவின் மீது விசாரணையும் தணிக்கையும் செய்தேன். அந்தக் குளிர்பான ஆலையில் தயாரித்த சில பாட்டில்களைக் கைப்பற்றி கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பியபோது, ‘அந்தக் குளிர்பானம் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ என்று சான்றிதழ் அளித்தது!
அந்தக் குளிர்பான நிறுவனத்தின் மீதான விசாரணையின்போது மிகச் சிறந்த வழக்கறி ஞர்கள் அனைவரும் ஆஜர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக 73 வயதான சம்பத் முதலியார் என்கிற சாதாரண முதியவர் தனது வாதங்களை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, அந்தக் குளிர்பான ஆலையை மூட 13 பக்க உத்தரவைத் தட்டச்சில் தயார் செய்தோம்!
‘அடுத்த நாள் காலை எட்டு பூட்டுக்களைக் கொண்டுவாருங்கள்’ என செங்கல்பட்டு வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினேன். அன்று காலை மாமண்டூரில் இருக்கக்கூடிய அரசினர் விருந்தினர் இல்லத்தில் மதுராந்தக வருவாய் கோட்டாட்சியரை அழைத்து, இந்த உத்தரவை அளித்து எட்டுப் பூட்டுக்களையும் கையிலே கொடுத்து ‘எதிரில் இருக்கும் அந்த ஆலையை இந்த உத்தரவுப்படி மூடிவிட்டு வாருங்கள்’ என்று அறிவுறுத்தினேன். உத்தரவைப் பெற்றுக்கொண்டவர் தயங்கியபடியே, ‘பன்னாட்டு நிறுவனத்தை மூடுகிறோமே, எதற்கும் மாவட்ட ஆட்சித் தலைவரைக் கேட்டுவிடுவோம்’ என்று சற்று அச்சத்துடன் சொன்னார். அதற்கு, ‘மாவட்ட ஆட்சித் தலைவரைக் கேட்டால், நிச்சயம் அனுமதிக்க மாட்டார். எனவே, நீங்கள் சென்று இந்த உத்தரவை நிறைவேற்றுங்கள்’ என்று சொன்னேன்.
காலை 10 மணிக்கு உள்ளே சென்றவர் ஒரு மணி நேரம் கழித்தும், ஆலையை மூடி விட்டு வரவில்லை. ஒரு மணி இரண்டு மணி ஆகி… அது மூன்று மணியும் ஆகியது! பின்னர் பதற்றத்தோடு வந்தவர், ‘ஆலை நிர்வாகம் ஆலையைப் பூட்ட மறுக்கிறது’ என்று கூறினார். உடனே நான், ‘இது சட்டப்படியான உத்தரவு. இதனை ஏற்க மறுத்தால் நானே நேராக வந்து ஆலையை இழுத்து மூடுவதோடு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஆலை நிர்வாகத்தினரிடம் சொல்லுங்கள்’ என்று கூறினேன். உள்ளே சென்ற அலுவலர் அப்படியே கூறியவுடன் குளிர்பான நிறுவனத் தினர் ஒதுங்கி ஆலையைப் பூட்ட அனுமதித்தனர். உலகின் மிகப் பெரிய பன்னாட்டுக் குளிர்பான நிறுவனம் எனது உத்தரவால் இழுத்து மூடப்பட்டது. பூட்டியதோடு, காஞ்சி புரம் மாவட்டத்தில் அந்த நிறுவனத்தின் பானங்களை விற்கத் தடை செய்தும் உத்தரவிட்டேன். இந்த நடவடிக்கைக்காக மேலதிகாரிகள் என்னைக் குடைந்தெடுத்துவிடுவார்கள் என்பதற்காக, அதனைத் தவிர்த்திட செய்யூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு ஆய்வுக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பினேன். வீட்டில் என்னிடம் எனது துணைவியார் மாவட்ட ஆட்சியர், தொழிற் செயலர், தலைமைச் செயலர் ஆகிய உயர் அலுவலர்கள் தொலைபேசியில் வந்தனர் என்று கூறினார். உடனே நான், ‘அப்படியெனில், நாளையே பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்புவதற்குத் தயாராக இருக்க வேண்டும். என்னை மாறுதல் செய்துவிடுவார்கள்’ என்று கூறினேன்.
சாதாரண அடிஷனல் டிஸ்டிரிக்ட் மாஜிஸ்திரேட் ஆக ஒரு பன்னாட்டு நிறுவனத்தை மூடியதோடு, அதன் விற்பனையைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது, இன்றும் எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது!”
ச.சிவஞானம், காஞ்சிபுரம்.
”உங்களின் நேர்மையான அணுகுமுறைக்கு சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ரியாக்ஷன் என்ன?”
”சில உயர் அலுவலர்கள் தங்கள் வெறுப்பை – கசப்பு உணர்வை என் மீது காட்டியதாக நான் கேள்விப்பட்டது உண்டு. மேலும், நான் உயர்வாகக் கருதிய ஒரு சில உயர் அதிகாரிகள் எனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்ப முயற்சித்ததும், ஒரு சில பத்திரிகைகளில் தங்களின் செல்வாக் கைப் பயன்படுத்தி, என்னைப்பற்றி அவ தூறாக எழுதக் காரணியாக இருந்ததும் எனது கவனத்துக்கு வந்தது. அது எனக்குச் சற்று வருத்தத்தை அளித்தாலும், அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அதே நேரத்தில், சில உயர் அலுவலர்கள் என்னுடைய நேர்மையைத் தொடர்ந்து அங்கீகரித்து வந்ததையும், சிலர் என்னை நேரில் பாராட்டியதையும், வெகு சிலர் நான் இல்லாதபோதும் மற்றவர்களிடத்தில் மனம் திறந்து போற்றியதையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து, அதனையே என் நேர்மைக்கு ஊக்கமாகக் கருதுகிறேன்!”
சு.ராமஜெயம், சென்னை.
”உங்களின் சின்ன வயதுக் கனவு என்னவாக இருந்தது?”
”சின்ன வயதில் எனக்கு எழுத்துக்களின் மீது ஈர்ப்பு உண்டு. வார்த்தைகளின் மீது ஒரு வசீகரமும் உண்டு. தினம் ஏழு கி.மீ. நடந்து சென்று படிக்கும் எல்லைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது வகுப்பில் முதல் மாணவன். இரண்டாவது நிலையில் சுலோச்சனா என்ற மாணவி. நன்றாகப் படிக்கின்ற எங்கள் இருவருக்கும் சுதந்திர தின விழாவில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் நாராயணசாமி எழுதிக்கொடுத்த உரையை மிக விரைவாக மனப்பாடம் செய்து பேசினேன். அன்று முதல் பரிசாக நான் பெற்றது ஒரு சிவப்பு நிற பென்சில். எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. பெருமிதம். பேச்சின் மீது எனக்கு ஈர்ப்பு பிறந்தது இங்கேதான்.
விளைவு, புதுக்கோட்டையில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும், கட்சிப் பாகுபாடு இன்றி அரசியல் கூட்டங்களுக்கும் பேச்சினைக் கேட்பதற்காகச் சிறுவனாக இருந்த நான் பார்வையாளனாகச் சென்று வந்துகொண்டு இருந்தேன். பேரறிஞர் அண்ணாவின் உரைவீச்சுக்கு நான் ரசிகன். தொடர்ந்து புதுகை மன்னர் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரி மாணவனாகப் பல பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறேன். அப்போது பேச்சாளன் – எழுத்தாளன் என்பதுதான் என் கனவாக இருந்தது. ஆனால், பள்ளிப் பிராயத்தில் என் அண்ணன்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மிதிவண்டியில் கடக்கிறபோதும், கல்லூரி நண்பர்களுடன் மாவட்ட ஆட்சியர் இல்லத்தைக் கடக்கிறபோதும் நானும் இது மாதிரி ஒருநாள் மாவட்ட ஆட்சியர் ஆவேன் என்று அவர்களிடம் சொல்லியதும் இன்றும் நினைவில் நிழலாடுகிறது!
இப்போது சிறு வயது கலெக்டர் கனவு நிறைவேறியது. இந்த சமூகத்துக்காகப் பேச்சாளராக வேண்டும், எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு இன்று வரை நிறைவேறவில்லை. எனினும், நான் பேச வேண்டியதையும், எழுத வேண்டியதையும் இன்று கலெக்டராக செயலில் காட்டிக்கொண்டு இருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தி எனக்கு உண்டு!”
வண்ணை கணேசன், சென்னை-110.
”நீங்கள் கட்டுப்படுவது யாருக்கு?”
”மனசாட்சிக்கு!”
ஆர்.பாலசுப்ரமணியன், திருப்பத்தூர்.
”சினிமா பார்ப்பீர்களா? உங்களுக்குப் பிடித்த படம் எது?”
”சினிமா மீது எனக்கு எப்போதுமே பெரிய ஆர்வம் இருந்தது இல்லை. அரசுப் பொறுப்புக்கு வந்த பின்பு நேரம் கிடைப்பது அரிது. இருப்பினும், சமீப ஆண்டுகளில் நண்பர்கள் பரிந்துரையின் பேரில் பார்த்தவற்றில் என் மனதில் பதிந்தவை – எனக்குப் பிடித்தமானவை ‘இந்தியன்’, ‘அழகி’, ‘தவமாய் தவமிருந்து’ படங்கள். இப்போது வாய்ப்பும் நேரமும் கிட்டினால் பார்க்க விரும்புவது புகழேந்தி தங்கராஜ் இயக்கிய ‘உச்சிதனை முகர்ந்தால்’ படம்!”
கு.ரத்தினம், ஆண்டிபட்டி.
”உங்களுக்குப் பிடித்த பொன்மொழி என்ன?”
”அமைதியான கடல், ஆற்றல் உள்ள மாலுமியை உருவாக்காது!”
எம்.திலீபன், திருவாரூர்.
”இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டு இருக்கும் புத்தகங்கள் என்னென்ன?”
”மூன்று புத்தகங்களை வாசித்துக்கொண்டு இருக்கிறேன். ‘நேரு முதல்நேற்று வரை’ என்ற புத்தகத்தில் ஓய்வுபெற்ற நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ப.ஸ்ரீ.இராகவன் தன் பணி அனுபவங்களை விளக்கியிருக்கிறார். இந்திய ஆட்சிப் பணி யில் இருப்பவர்கள் சந்திக்கக்கூடிய சவால் களை, பிரச்னைகளைத் தனது அனுபவங் களைக்கொண்டு எழுதியிருக்கிறார்.
தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உயர்ந்த தத்துவங்களின் உன்னத வெளிப்பாடாக வந்திருக்கிற ‘The only revolution’ புத்தகம். மூன்றாவதாக, பிலிப் மேசன் எழுதிய ‘The Men Who Ruled India’ என்ற புத்தகம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் நிர்வாகத்தில், ராணுவத்தில் தடம்பதித்த மிக அருமையான அலுவலர்களின் செயல்பாட்டைப் பற்றிய அற்புதமான நூல்!”
த.ஆகாஷ் மணிகண்டன், மதுரை.
”ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடிகிறதா?”
”அரசுப் பதவிக்கு வந்தபோது நான் லட்சிய தாகம் நிறைந்த ஓர் இளைஞனாக இருந்தேன். நேர்மையான ஓர் அலுவலராக இருக்க வேண்டும் என்பதோடு, இந்த அமைப்பையே நேர்மையான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற உறுதியும் இருந்தது. அநியாயங்களின் ஆணிவேரை அறுக்க வேண்டும் என்கிற ஆவேசம். இன்று வரை எள் முனை அளவும் அந்த லட்சிய தாகத்தில் இருந்து விடுபடாது நேர்மையாகப் பயணிக்கிறேன். அநியாயங்களுக்கு எதிரான என் ஆவேசம் அப்படியேதான் இருக்கிறது. என்னிடம் பணியாற்றும் எல்லா ஊழியர்களையும் நேர்மையாகப் பணியாற்றவைக்க வேண்டும் என்ற என் முயற்சியில் இதுவரை முழு வெற்றியை நான் பெறவில்லை.
ஆனால், நான் பெற்றிருக்கிற இந்தப் பதவியை _ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழைகள் ஏற்றம் பெற உதவ வேண்டும்; இந்த தேசத்தின் ஜீவநாடியாக இருக்கும் கிராமங்களின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவை ஓர் அரசு அலுவலர் என்ற முறையில் ஓரளவு நான் நிறைவேற்றி இருக்கிறேன்!”
மு.இளவரசு, காஞ்சிபுரம்.
”உங்கள் குடும்பப் பின்னணியைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?”
”புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். உண்மையையும் உழைப்பையுமே தன் மூச்சாகக்கொண்ட பாசாங்கு இல்லாத ஒரு சாதாரண கிராமத்து மனிதர் என் தந்தை உபகாரம் பிள்ளை. என்னிடத்தில் அளப்பரிய நேர்மையையும் அற நெறிகளையும் ஆழமாக ஊன்றியவர் என் தாய் சவரியம்மாள். இவர் களுக்கு நாங்கள் ஐந்து ஆண் பிள்ளைகள். நான் கடைசியாகப் பிறந்தவன்.
எனது மனைவி விமலா, இல்லத்தரசி. எனது நேர்மை தவத்துக்குத் துணையாக _ தூணாக இருக்க ஆடம்பர ஆசைகளை அறுத்தெறிந்து எளிய வாழ்க்கை முறையை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர். மகன் அருள் திலீபன் ஒன்பதாம் வகுப்பும் மகள் அருள் யாழினி ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். உயர் அதிகாரியின் பிள்ளைகளாக இருக்கிற காரணத்தினால் தனி காரில் தான் பள்ளிக்குச் செல்வேன் என்று அடம் பிடிக்காமல், எல்லாப் பிள்ளைகளும் செல்லும் பொது வாகனத்தில்தான் போக வேண்டும் என்று நான் சொல்லும்போது என் எண்ணத்தைப் புரிந்துகொண்டு, அதை ஏற்று நடக்கும் இனிய செல்வங்கள் அவர்கள்.
கடினமான முடிவும் கடுமையான நடவடிக் கையும் நான் எடுக்கிறபோது அதனால் பாதிப்புக்குள்ளாகுபவர் வலிமை மிக்கவராக இருந்தால், அவர்களை எதிர்கொள்வதற்கு என்னிடம் இருக்கும் மிகப் பெரிய முதல் ஆயுதம், நேர்மை. அந்த நேர்மைக்கு அணுவளவும் பங்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் என்னைப் போலவே என் மனைவியும் குழந்தைகளும் கவனமாக இருப்பார்கள்.
இந்தச் சமூகத்துக்கான என் கடினமான நேர்மைப் பயணத்தில் என்னோடு கைகோத்து உடன் வரும் என் நன்றிக்குரிய நண்பர்கள் இவர்கள்!”
கே.அன்பு, செய்யாறு.
”ஏனைய வேலைகளைவிடவும் நல்ல ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க என்ன காரணம்?”
”இந்தக் கேள்விக்கான விடை தேசப்பிதா காந்தியின் வார்த்தைகளில் அடங்கி இருக் கிறது. ”இந்த உலகத்தால் எல்லா மனிதர் களுடைய தேவைகளையும் பூர்த்திசெய்ய இயலும். ஆனால், ஒரு தனி மனிதனின் பேராசையை நிறைவேற்ற ஒருநாளும் அதனால் முடியாது!” என்றார் அவர். ஓர் அரசு ஊழியரின் தேவைக்கு இன்று அரசு போதுமான அளவு சம்பளம் அளிக்கிறது. ஆனால், யாருடைய பேராசைக்கும் யாராலும் சம்பளம் அளிக்க முடியாது. அடிப்படைத் தேவைக்கு அளிக்கப்படும் சம்பளம் போதுமானது. ஆடம்பரத் தேவைகளுக்கு யார்தான் கூலி கொடுக்க இயலும்?
மாறிப்போன நம் சமூகத்தின் மதிப்பீடுகள் லஞ்சம் வாங்குவதை ஊக்குவிப்பதாகவே இருக்கிறபோது லஞ்சம் வாங்க எவர்தான் தயங்குவார்கள்? ஆனாலும், அரசு ஊழியர்களில் நேர்மையாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நம் நேசத்துக்கு உரியவர்களாக மட்டும் அல்ல; போற்றுதலுக்கு உரிய புனிதர்களாகவே நான் கருதுகிறேன்!”
அ.கருணா, சென்னை-74.
”இந்தியாவில் தேர்தல் அமைப்புபற்றி உங்களது பொதுவான கருத்து என்ன?”
”இந்தியத் தேர்தல் ஆணையம் நேர்மை யான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன். உலகின் மிகப் பெரிய ஜனநாயக மாண்பைக் காக்க சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் சமீப காலங்களில் அது எடுத்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளின் முழுப் பலனைப் பொதுமக்களுடைய விழிப்பு உணர்வு ஒன்றே உறுதிப்படுத்தும். எனவே, இன்றைய தேவை பொதுமக்களிடையே நேர்மைபற்றிய விழிப்பு உணர்வே!”
கி.அண்ணாமலை, திண்டிவனம்.
”உங்கள் நிர்வாகத்தில் உங்களுக்கே லஞ்சம் கொடுக்கப் பலர் முன்வந்திருப்பார் களே? அவர்களுக்கு நீங்கள் தந்த ட்ரீட் மென்ட் என்ன?”
”என் 20 ஆண்டு கால பணிக் காலத்தில் எவரையுமே என்னை லஞ்ச நோக்கத்துடன் நான் நெருங்கவிட்டதே இல்லை என்பதுதான் உண்மை. ‘நான் நேர்மையாக இருக்கிறேன்’ என்று நாம் வெளிப்படையாகச் செயல்படும்போது, நம்மிடம் ஊழல்வாதிகள் நெருங்கவே தயங்குவார்கள். அதனால், லஞ்ச நோக்கங்களுடன் எவரும் என்னை அணுகியது இல்லை.
ஆனால், நான் நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது, ஒரு விசித்திரமான நிகழ்ச்சி நடந்தது. அன்றைக்கு ஆசிரியர் தினம். ராசிபுரத்துக்கு அருகேயுள்ள மசக்காளிப்பட்டியில் இருக்கும் ஒரு கல்வியியல் கல்லூரியில் பேச நாமக்கல்லில் இருந்து சென்றுகொண்டு இருந்தேன். சாலையில் இரு சக்கர வாகனத் தில் இரண்டு இளைஞர்கள் எங்களுக்கு முன்பாகச் சென்றுகொண்டு இருந்தனர். சாலையில் அங்கும் இங்குமாகத் தறிகெட்டுச் சென்றுகொண்டு இருந்தது அவர்களுடைய வாகனம். அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்ற வர்கள்தானா; ஒருவேளை குடிபோதையில் ஓட்டுகிறார்களா என்று பார்ப்பதற்காக அவர்களை விரட்டிச் சென்று மறிக்குமாறு ஓட்டுநரிடம் கூறினேன். அவர்களை மறித்த போது, நான் வாகனத்தில் இருந்து இறங்க வில்லை. எனது உதவியாளர்கள் இறங்கிச் சென்று அவர்களைச் சோதித்தனர். அவர்கள் குடித்திருக்கிறார்கள் என்றும் உரிமம் இல்லை என்றும் உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக கோபத்தோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலரை அலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களது வாகனத்தைக் கைப்பற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். உடனே, அந்த வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கெஞ்சினார்கள். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் தனது சட்டைப் பையில் இருந்து 100 ரூபாய் பணத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். இதைப் பார்த்து என்னுடைய உதவியாளர் களுக்குக் கடுமையான கோபம். அந்த இளைஞரை அடிக்கப்போய்விட்டனர். நான் தடுத்துவிட்டேன்.
அப்போது எனக்கு ஒன்று மட்டும் புரிந் தது. என்னருமை தேசத்தில் குடித்தவனிடத் தில்கூட ஒரு தெளிவு இருக்கிறது. அதாவது, தப்பு செய்தால் கலெக்டரிடத்தில்கூட லஞ்சம் கொடுத்துத் தப்பிவிடலாம் என்று. இந்த நிகழ்ச்சி எனக்கு அதிர்ச்சியாக இருந் தாலும், எப்படியெல்லாம் இந்தச் சமூகம் புரையோடிப் போயிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். பிறகு, அந்த வாகனத் தைக் கைப்பற்றி குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்த உத்தரவிட்டேன்!”
ஆ.ராமசாமி, கோவிலூர்.
”இந்தியாவிலேயே முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சொத்து விவரங்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று எப்படித் தோன்றியது?”
”நேர்மையான அலுவலர்கள் – ஊழியர்கள் ஆங்காங்கே இருந்தபோதிலும் – அரசு அலுவலர்கள் சட்டத்துக்குப் புறம்பாகஊழல் செய்துதான் சொத்து சேர்க்கிறார்கள் என்ற எண்ணம் மக்களிடத்தில் பரவி இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையான மக்களின் இந்த மனநிலை _ எண்ண ஓட்டம் நல்ல அறிகுறி அல்ல. இது அபாயகரமானது. எனவே, இந்த வெகு மக்களின் எண்ணம் மாற்றப்பட வேண்டும் என உளமாற எண்ணினேன்.
அதேபோல், எனக்குக் கீழே பணியாற்றக் கூடிய ஊழியர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று போதிப்பதைக் காட்டிலும் நானே ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறபோது, அவர்களது மனநிலையில் நேர்மையை நோக்கிய ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்றும் நம்பினேன்.
எனவே, ஒரு நேர்மை நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றால், நாமே சில வெளிப்படையான நடவடிக்கைகளை எடுத்துத் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் 2009-ம் ஆண்டு பிற்பகுதியில் எனது சொத்துக் கணக்கை நானே முன்வந்து இணையதளத்தில் வெளியிட்டேன். விரைந்து வெளியிட்டது விளம்பரத்துக்காக அல்ல; வெளிப்படை நிர்வாகத்துக்கு வித்தாகும் என்றுதான்!”
லலிதா, காஞ்சிபுரம்.
”ஐ.ஏ.எஸ். ஆக இருந்து நீங்கள் செய்த பணிகளில் உங்களுக்கு நிறைவுஅளித்தது எது?”
”நான் ஏற்றுக்கொண்ட எல்லாப் பணி களும் எனக்கு நிறைவளித்தவைதான். இருப் பினும், மதுரை மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றுகின்ற இன்றைய நிலை எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. அதற்குரிய காரணங்களில் ஒன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சட்ட மன்றத் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் சுதந்திர மான சூழலில் நடத்திக்காட்டியது; மதுரை மாவட்டத்தில் அவ்வாறு நடத்திக்காட்ட நானும் ஒரு சின்ன கருவியாக இருந்து கடமையைச் செய்ததும் நேர்மையின்பால் மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்ததும் ஆகும்!”