ஏ.பி.கே.இளமுருகன், காளிப்பட்டி.
”மு.க.அழகிரியிடம் மோதல் ஏன்?”
”விசாரணை இப்போது நடைபெற்று வருகின்ற நிலையில், விரிவாகச் சொல்வது விதிமுறைகளுக்கு உகந்ததாக இருக்காது என்றே நான் கருதுகிறேன். இருப்பினும், மோதல் என்ற வார்த்தைப் பிரயோகம் இங்கே சரியானது அல்ல!
நான் அடிப்படையில் ஓர் அரசு ஊழியன். சட்டமும் விதிகளுமே எனது வழிகாட்டி. நடுநிலைமையும் நேர்மையும்தான் எனது பண்பு நலன். தேவையற்ற மோதலோ, தேவை இல்லாத சார்தலோ நடுநிலை ஊழியருக்கான அடையாளம் அல்ல.
‘எங்களின் வாழ்வாதாரமான நீராதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அதனைக் காத்திடுங்கள்!’ என்ற ஒரு விவசாயியின் கோரிக்கை மனுவில்தான் என் விசாரணை தொடங்குகிறது.
நமக்கெல்லாம் உண்ண உணவு அளிக்கின்ற ஓர் உழவனின் கோரிக்கையை ஏற்று, ஒரு கலெக்டர் தன் கடமையின் ஒரு பகுதியாக விசாரிக்க உத்தரவிடுவதற்கு ‘மோதல்’ என்ற சொல் பொருத்தமற்ற வர்ணிப்பாகும். இந்தக் கேள்வி கேட்கும் உங்கள் மீது ஒரு புகார் அளிக்கப்பட்டாலும், விசாரணை நடத்த வேண்டியது என் கடமை!”
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
”தமிழனாகப் பிறந்ததற்கு எப்போதாவது வருத்தப்பட்டது உண்டா? ஏன்?”
” ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளில், எம் தமிழ்ச் சமூகம் உலகில் எல்லா மக்களையும் உறவினர்களாகக் கருதிய ஒப்பற்ற சமூகம் என்று உயர்ந்து நின்று நான் பெருமைப்பட்டேன்.
குளிரால் வாடிய மயிலுக்குப் போர்வை போர்த்தினான் பேகன். எம் சமூகம் உலகின் எல்லா ஜீவராசிகளையும் நேசித்த நிகரற்ற சமூகம் என்று நிமிர்ந்து நின்று இறுமாப்புகொண்டேன்.
முல்லைக்குத் தேர் கொடுத்தான் வள்ளல் பாரி என்ற கதையில் இருந்தும், வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் பெருமானின் கருத்தில் இருந்தும், எம் சமூகம் செடி கொடிகளைக்கூட நேசிக்கும் செம்மையான சமூகம் என்று சிலாகித்துக்கொண்டேன்.
இப்படி உலகின் எல்லா மனிதர்களையும் உறவினர்களாக உணர்ந்த, எல்லா ஜீவராசிகளையும் நேசித்து நின்ற, செடி கொடிகளைக்கூடக் காத்திடும் கடலளவு கருணைகொண்டதாகத் திகழ்ந்தது தமிழ்ச் சமூகம்.
ஆனால், இந்தச் சமூகத்தின் வழித்தோன்றல்களான அரும்புகளாம், பிஞ்சுகளாம், பிற குழந்தைகளைப் போல பூவுலகில் வாழ பூரண உரிமை பெற்ற… ஒரு பாவமும் அறியாத… வாழத் துடித்த குழந்தைகளையும் பெண்களையும் ஈழ மண்ணில் முள்ளி வாய்க்காலில் கொன்றழித்த பேரவலத்தைக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நின்று கண்டபோது, ஒரு தமிழனாகப் பிறந்ததற்காக வருத்தம் மட்டும் அல்ல… பாட்டுக்கொரு புலவன் பாரதி நொந்து சொன்னதைப் போல,
‘விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக் குரையாயோ?’
என்று வேதனையின் விளிம்புக்கே சென்றேன்.
மனசாட்சியுள்ள எந்த மனிதனுக்கும் ஏற்படும் அந்த வருத்தமும் வலியும் என்னைப் போலவே; என் தலைமுறைக்கும் இருக்கும் என்பதே உண்மை!”
கே.சீதாலட்சுமி, பெரியநாயக்கன்பாளையம்.
”தடாலடி அதிரடி நடவடிக் கைகள் மூலம் உங்களை நீங்கள் பிரபலப்படுத்திக்கொள்ள முயல்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுபற்றி?”
” ‘அதிரடி நடவடிக்கை’ என்ற வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இந்த வார்த்தைகள் பல நேரங்களில் பலரால் தவறாகவே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஊழல் செய்பவர்களின் ஒன்றிரண்டு நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக இந்த வார்த்தைப் பிரயோகம் வலிமைசேர்த்து இருக்கிறது என்பதுதான் உண்மை.
எந்த நாளும் என்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்காக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவன் அல்ல நான். நிலையற்ற மனிதப் புகழ்ச்சியில் நான் என்றுமே மயங்கியது இல்லை. விளம்பரம் வியாபாரிகளுக்குத் தேவை.
காஞ்சிபுரத்தில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்திய நிலையில், நானும் எனது ஊழியர்களும் தாக்கப்பட்டபோதும், ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தை இழுத்து மூடியபோதும், சென்னையில் பல நூறு கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டபோதும் அபாயங்களின் அருகிலேயேதான் பயணித்து இருக்கிறேன். அவை எல்லாம் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டிய பிசுபிசுப்பு எண்ணங்களால் எவராலும் செய்திட முடியாது. இந்தச் சமூகத்தை ஆழமாக நேசிப்பதும், சமூக அவலங்களை அறுத்தெரிகின்ற ஆவேசமும், நிகரற்ற நீதி உணர்வும் நெடுங்கால நேர்மையும் இல்லாமல் இந்த நிகழ்வுகள் சாத்தியம் இல்லை.
அடிப்படையில் நேர்மை இல்லாத எவரும் எந்த அதிரடி நடவடிக்கைகள் மூலமாகவும் தங்களை நீண்ட காலம் நிலைநிறுத்திக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. அதே நேரத்தில், தந்தை பெரியாரின் வார்த்தைகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் சொல்வார்… ‘ஒரு லட்சம் ரூபாயை என்னிடம் கொடுத்துவிடுங்கள். ஒரு மகா அயோக்கியனை யோக்கியனாக இந்தச் சமூகத்தில் விளம்பரப்படுத்திக் காட்டுகிறேன். பிரபலப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்று. பணம் இருந்தால், எவரும் இந்தச் சமூகத்தில் பிரபலமாகிவிட முடியும். என்னிடத்தில் இருப்பது சத்தியமும் நீதியும் இந்தச் சமூகத்துக்குமான உண்மையான பரிவும்!”
கே.எஸ்.வெங்கடேசன், கொசவன்குழிவளவு (சேலம்).
”உங்களுக்கு வந்த கடிதத்தில் மறக்க முடியாத கடிதம் எது?”
”திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி விநாயகா தெருவில் வசிக்கின்ற அழகேஸ்வரி என்பவருடைய மகன் ராகுல் என்ற பத்தாம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதத்தின் சுருக் கம் இது…
‘மரியாதைக்குரிய அண்ணனுக்கு வணக்கம்! எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். உங்களைப் போலவே என்னை மிகவும் நேர்மையாளனாக உருவாக்க அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். நானும் அவரது கனவை நனவாக்குவேன். நானே விதை ஊன்றி வளர்த்து வைத்திருக்கும் இலுப்பை மரத்தினையும் நாவல் பழ மரத்தினையும் உங்களுக்குப் பரிசாகக் கொடுக்க விரும்புகிறேன். எப்போதும் கூப்பிடுங்கள்… நானும் அம்மாவும் உங்களைச் சந்திக்க வருகிறோம்!’ என்று எழுதி இருந்தான். அந்தச் சிறுவனைச் சந்திக்க நானும் காத்திருக்கிறேன்!”
எல்.உக்கிரபாண்டியன், நரிமேடு.
”ஒரு வேளை, நீங்கள் கலெக்டராக இல்லாவிட்டாலும், மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்திருப்பீர்களா?”
”மக்களுக்கு உதவி செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை பதவியின்பாற் பட்டதல்ல. அது என் உள்ளக்கிடக்கை. எளியோருக்கும் புறக்கணிக்கப்பட்டோருக்கும் பரிவு காட்டி உதவ வேண்டும் என்று என் ஆழ்மனத்தின் எண்ணத்தை கலெக்டராக இருந்துகொண்டு அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் நிறைவு செய்கிறேன்.
கலெக்டர் பதவி இல்லாவிட்டாலும் என்னளவில் வாய்ப்புக்கும் சூழலுக்கும் ஒப்ப முடிந்தது எதுவோ, அதை மக்களுக்குச் செய்துகொண்டுதான் இருந்திருப்பேன்.
நான் நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது, ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஓர் இல்லத்தைத் தொடங்கினோம். அதை நடத்துவதற்கு நான் உட்பட அரசு அலுவலர்கள் சிலர் மாதம்தோறும் சம்பளம் பெறுகின்றபோது, ஒரு தொகையை ஒதுக்கி நிர்வகித்துவந்தோம். நான் மாறுதலாகி வந்த பிறகும் அதனைத் தொடர்ந்து நடத்திட, அலுவலர்கள் ஒதுங்கிக்கொண்டபோதும், நான் முயற்சிக்கிறேன். இன்றும் நாமக்கல்லில் உள்ள நல்ல உள்ளங்களின் உதவியோடு சிரமத்துக்கு இடையே அந்த இல்லத்தை நடத்திவருகிறோம். ஆக, மக்களுக்கு உதவி என்பது பதவியோடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. வாய்ப்புக் கிடைக்கிறபோது எல்லாம் செய்யத் தோன்றும் செம்மை எண்ணம் அது!”
வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.
”கண்டிப்பாக இருந்து எதிரிகளைச் சம்பாதித்து, நேர்மையாக இருந்து சில சௌகரியங்களை இழந்து… நீங்கள் பெற்றதுதான் என்ன?”
”இங்கிலாந்து நாட்டின் பிரதம அமைச்சராக விளங்கிய சர் ராபர்ட் வால்போல், ‘எல்லா மனிதர்களுக்கும் விலை உண்டு’ (All those men have their price) என்று ஆட்சியாளர்களைப் பார்த்து நேர்மையற்றவர்கள் என்ற பொருளில் குறிப்பிட்டதைப் பொய்யாக்க விரும்பியதே எனது இந்த வாழ்க்கை!
நான் ஆட்சியராகப் பணியாற்றிய ஒரு மாவட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களை நான் கிராமத்தில் தங்க உத்தரவிட்டேன். அவர்கள் என்னை மாற்றம் செய்திடக் கோரி எனக்கு எதிராகப் போராடினார்கள். இந்த நிலையில் டெல்லிக்கு அருகே உள்ள மசூரிக்கு 54 நாள் பயிற்சிக்குச் சென்றேன். பயிற்சிக்குச் சென்ற ஒரு வார காலத்தில் எனக்கு எந்தப் பணியிடமும் கொடுக்கப்படாமல் மாவட்டப் பணியிடத்தில் இருந்து மாற்றப்பட்டேன்.
54 நாட்கள் பயிற்சியை முடித்துவிட்டு நான் திரும்பி வந்தபோது, விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எந்த வாகனமும் வரவில்லை. அலுவலர்கள் எவரும் வரவில்லை. நண்பர் பிரகாசம் அவர்கள் விமான நிலையம் வந்து, என்னைத் தன் வாகனத்தில் அழைத்து வருகிறார். ‘நேர்மையாக இருப்பது ஒரு குற்றமா? இந்த தேசத்தில் நேர்மைக்கு இவ்வளவுதான் மதிப்பா?’ என்று மிகவும் மனம் நொந்து பேசிக்கொண்டே வந்தார் பிரகாசம். நான் எதுவும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை!
இருவரும் அண்ணா சாலை சாந்தி தியேட்டர் வளாகத்தில் உள்ள சரவண பவன் உணவகத்தில் உணவருந்தினோம். அங்கு கை கழுவிவிட்டு வெளியே வர எத்தனிக்கையில், நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியினர் 20 வயதுள்ள தன் மகனோடு வந்து என்னைப் பார்த்து, ‘அய்யா வணக்கம்’ என்றார். நானும் பதிலுக்கு ‘வணக்கம்’ என்றேன். பிறகு, ‘அய்யா, உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். உங்கள் நேர்மை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்றார்கள். ‘நேர்மையாக இருப்பது எங்கள் கடமை அல்லவா’ என்றேன் நான். அதற்கு, ‘இல்லை அய்யா, நாட்டில் இப்போ யாருய்யா நேர்மையாக இருக்கிறார்கள்?’ என்றவர், என்ன நினைத்தாரோ சட்டென்று, தங்கள் மகனை ‘அய்யா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குடா’ என்றார். எனக்கோ சங்கடம்! அப்படிச் செய்ய வேண்டாம் என்று தடுத்தபோதும் அந்த இளைஞன் என் காலைத் தொட்டுக் கும்பிட்டான். எனக்குச் சங்கடமாக இருந்தாலும், ‘நீ சாதிக்க வேண்டும்’ என்று வாழ்த்தினேன். ‘இந்தக் காலத்துலயும் இப்படி நேர்மையா இருக்கிறவங்க தெய்வத் துக்குச் சமமானவங்கடா!’ (எனக்கு அந்த வார்த்தையில் ஒப்புதல் இல்லை. ஆனால், அவர் சொன்னது இது.) என்று அந்தத் தந்தை தன் மகனிடம் சொல்லி அழைத்துச் சென்றார்.
ஏதோ புரிந்ததுபோல என் நண்பர் பிரகாசம் என் கைகளை அழுத்திக்கொண்டார்!”