எம்.கோதண்டம், நாகர்கோவில்.
”சாதாரணப் பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆன நீங்கள், இன்று அதே கனவுடன் இருக்கும் இளைஞர் களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
”எங்கு வேண்டுமானாலும் நாம் படித்திருக்கலாம். ஐ.ஏ.எஸ். (சிவில் சர்வீஸ்) தேர்வுக்காக எதைப் படிக்கப்போகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். முதல் நிலைத் தேர்வு, முக்கியத் தேர்வில் எத்தனைத் தாள்கள் உண்டு. எந்தெந்த நூல்கள் வேண்டும், தயாரிப்புக்கு எத்தனை நாட்கள் வேண்டும் என்று தெளிவாகத் திட்டமிடுங்கள். நீங்கள் விரும்பிப் படித்த பாடங்கள் பல இருக்கலாம். இந்தத் தேர்வுக்கு எதை விருப்பப் பாடமாகப் படிக்கப்போகிறோம் என்பதில் தெளிவான புரிதல் வேண்டும்.
பொதுவாக நமக்கு அறிவு உண்டு. பொது அறிவு என நமக்கு எது உண்டு என்பதை நாம் அறிந்திட வேண்டும். தலைநகர் டெல்லியில் செங்கோட்டை எங்கு உண்டு, குதுப்மினார் எங்கே இருக்கிறது என உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதே சமயம், இந்தத் தேர்வுக்கு வழிகாட்ட தரமான பயிற்சி நிலையம் தலைநகரில் எங்கு உண்டு (சென்னையிலும் – உங்கள் ஊரிலும்) என்று தெரிந்திருப்பதும் அவசியம். நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறபோது ஆள்பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டியது இல்லை. நம் ஆளுமை பிறருக்குப் பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயற்சிக்கலாம்.
தீர்க்கமான இலக்கும், தெளிவாகத் திட்டமிடுதலும், கண் துஞ்சாது படிப்பும், கடினமான உழைப்பும், காணும் கனவை நனவாக்கும் திறமும் இருந்தால், எந்தப் பின்னணிகொண்ட இளைஞனுக்கும் ஐ.ஏ.எஸ். கனவு சாத்தியம்தான். கிராமங்களின் சிரமங்களில் இருந்து கிளம்பி வந்தாலும் சிகரத்தைத் தொடஉங்க ளாலும் முடியும். ஆனால் ஒன்று, ஐ.ஏ.எஸ். என்பது இந்த தேசத்தின் அதிகார மையங்களின் உச்சாணிக் கொம்பில், உயர்ந்த பொறுப்புக்களில் உங்களை உயர்த் துகின்ற கருவி. பொறுப்புக்களில் நாம் உயர்வதற்கு வாய்ப்புக்கள் ஏராளமாக உண்டு. ஒரு நாளும் பொருளாதாரத்தில் உயர்வதற்கு இது உயர்ந்த வாய்ப்பு என்று எண்ணி எவரும் வர வேண்டாம்.
அன்பிற்குரிய இளைஞர்களே! நாட்டின் சேவைக்காக லட்சியக் கனவுகளோடு வாருங் கள். லஞ்ச எண்ணங்களோடு வர வேண்டாம்!”
நா.மனோஜ்குமார், சென்னை-75.
”பொது வாழ்வில் ஊழல் செய்யாமல் வாழ்ந்தால், பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்களே. தூய்மையுடன் ஒருவரால் வாழ முடியாதா? அப்படி வாழ என்ன செய்ய வேண்டும்?”
”பொது வாழ்வில் ஊழல் செய்யாமல் நேர்மை நெறியோடு இருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ‘பிழைக்கத் தெரிந்தவர்கள்’ பட்டம் சூட்டிப் பரிகாசம் செய்வது உண்டு. நேர்மையை லட்சியமாகக் கொண்டு இருப்பவர்கள் அந்தப் பரிகாசங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியப்படுத்துவதே ஆரோக்கியமானதாகும்.
ஒருவேளை, இந்தப் பிழைக்கத் தெரியாத நேர்மையாளர்களுக்கு வாழ்வும் வளமும் இல்லாமல் போகலாம். ஆனால், வரலாறு உண்டு!
பொது வாழ்வில் தூய்மையாக வாழ முடியும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும். எங்கள் மதுரைப் பக்கம் வந்தால் மேலூரைத் தாண்டிச் செல்பவர்கள் மேன்மையோடு நிற்கும் ஒரு சிலையைத் தவறாது பார்க்க முடியும். அது பெருமகனார் கக்கனுடையது. பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர், மிகக் கொடூரமான சாதியக் கட்ட மைப்பின் அடித்தளத்தில் இருந்து வந்து கீர்த்தி பெற்றவர். அடக்கப் பட்ட சமூகத்தில் தோன்றிய கக்கனுக் குச் சிறப்பின் அடையாளமாகச் சிலை எழுப்புகிறார்கள் என்றால், அது நேர்மைக்குக் கிட்டிய பரிசு தானே!”
கு.வானதி, சென்னை-68.
”நேர்மையாகச் செயல்படுவதால் நீங்கள் பெற்றது என்ன… இழந்தது என்ன?”
”20 ஆண்டு காலப் பணியில் 18 முறை மாறுதல். குழந்தைகளின் கல்வி பாதிப்பு. சக ஊழியர்களின் வெறுப்பு. ‘பிழைக்கத் தெரிந்தவர்’ களின் பரிகாசம். நண்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறை வது. சின்னச் சின்ன அவமானங் கள். தனிமைப்படுத்தப்படுதல். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி மக்களிடம் பெற்றிருக்கக்கூடிய நம்பிக்கை. அது கொடுக்கும்ஆத்ம திருப்தி. குறைவாக இருந்தாலும் லட்சிய தாகம் உள்ள நண்பர்கள். அதைக் காட்டிலும், தமிழ் மக்களின் அளப்பரிய நம்பிக்கையைப் பெற்ற ஆனந்த விகடனில் லட்சக்கணக்கான வாசகர்களுடன் அளாவளாவும் வாய்ப்பு. இவையே நேர்மையாக இருந்ததால் நான் பெற்றவை.
இழந்தது என்று பார்த்தால், கடினமான சில சூழல்களில் நிம்மதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!”
மு.இரத்தினம், ஆண்டிபட்டி.
”மதுரையின் உணவு வகைகளில் தங்களைக் கவர்ந்த உணவு எது?”
”மதுரையில் வெளியில் சென்று உணவு விடுதிகளில் நான் சாப்பிடுவது என்பது அரிது. எனவே, எந்த உணவு எனக்குப் பிடிக்கும் என்று அனுபவ அறிவு இல்லாமல் சொல்வது சிரமம். இருப்பினும், இரவு நேரங்களில் சுடச்சுட சுவையான இட்லி கிடைக்கும் என்றும், கடல் பாசியைக் கொண்டு செய்யப்படும் இனிப்பு பானமான ஜிகர்தண்டா சுவையாக இருக்கும் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஆனாலும், எங்கள் மதுரையில், நத்தம் சாலையில் அரசின் சார்பில் நாம் துவங்கி இருக்கும் உழவன் உணவகத்தில் தயாரித்து வழங்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் எல்லாமே அருமை.
இங்கு பீட்ஸா, பர்கர், தந்தூரி, நூடுல்ஸ் ஆகிய நம் மண்ணுக்குத் துளிக்கூடச் சம்பந்தம் இல்லாத உணவுகளை உண்டுவந்த இளைஞர்கள்கூட, இன்றைக்கு முடக்கத்தான் கீரை தோசை, வரகரிசி – முருங்கைக் கீரை இட்லி, வல்லாரை – கொள்ளு – வரகு இட்லி, கருப்பட்டிப் பணியாரம், குதிரைவாலி காய்கறி ஊத்தப்பம், வரகு வெண்பொங்கல், பாகற்காய் குழம்புடன் நெல்லிக்காய் சட்னி, கேப்பைப் புட்டு, கொழுக்கட்டை, கேழ்வரகு முறுக்கு, சோள மாவு பிஸ்கட், தினை காராச் சேவு போன்ற உணவு வகைகளை ருசி பார்க்கிறார்கள்.
இங்கு பசியாற மட்டும் அல்ல, நம் பாரம்பரியம் அறியவும் வருகிறார்கள். நம் முன்னோர் கள் நீண்ட நெடுங்காலமாக சிறுதானியங் களைக்கொண்டு தயாரித்த ஆரோக்கிய மான பதார்த்தங்களே இங்கு படைக்கப்படு கின்றன. இங்கு வழங்கப்படும் உணவின் ஒவ்வொரு பருக்கையும் உடலினை உறுதி செய்யும்!”
வண்ணை கணேசன், சென்னை-110.
”சில நேரங்களில் பொய் ஜெயித்து விடுகிறதே… அப்படியான சமயங்களில் தங்களின் மனநிலை எப்படி இருக்கும்?”
”தங்களுடைய கேள்வியிலேயே இதற்கான விடை இருக்கிறதே! பொய் ‘சில நேரங்களில்’ மட்டும்தான் ஜெயிக்க முடியும் என்று நீங்களே சொல்கிறபோது, பல சமயங்களில் பொய் தோற்றுவிடும் என்றுதானே அர்த்தம். அந்தச் சில தருணப் பொய்மையின் வெற்றியும் ஆழமானது அல்ல. நிரந்தரமானதும் அல்ல. உண்மை வெற்றி பெறுகின்றபோது, அது ஓங்கி உயர்ந்த வெற்றியாகவும் நீடித்து நிலைத்து நிற்கும் வெற்றியாகவும் இருக்கும் என்பதே எனது மனநிலை!”
ச.ஐயப்பன், நல்லாலம்.
”மதுரையில் யாரேனும் ஒருவருக்குச் சிலை எழுப்ப உங்களுக்கு வாய்ப்பு அளித்தால், யாருக்குச் சிலை எழுப்ப விரும்புவீர்கள்?”
”கர்னல் ஜான் பென்னி குயிக் அவர் களுக்குத்தான்!
பாதையே இல்லாத அடர்ந்த காட்டில், கொடிய மிருகங்களுக்கு இடையேயும் நச்சு அரவங்களுக்கு இடையேயும் அணைகட்டும் பணியை அயராது தொடர்ந்தவன்.
18.06.1890ல் கடுமையான பேய் மழையினால் அணைக்கட்டுப் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட காட்சியைக் கண்டு, கோ வெனக் கண்ணீர்விட்டுக் கதறி அழுதவன்.
1893-ல் இந்தப் பகுதியில் ஏற்பட்ட காலராவினால் நூற்றுக்கணக்கில் உயிர்கள் பலியாகின. அதில் பென்னி குயிக்குடன் பணியாற்றிய 45 ஆங்கில உயர் அதிகாரிகளும் இறந்துவிட்டனர். இறப்பும் இழப்பும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபோதும், அணை கட்டும் பணியைக் கைவிடாது தொடர்ந்தவன்.
ஆங்கில அரசு, பெரியார் அணைக்கட்டைக் கட்ட முடியாது என்று கைவிட்ட நேரத்திலும், தொடர்ந்து பணி செய்து அணை கட்ட உறுதி கொண்டவன்.
நிதி இல்லாதபோது லண்டனில் உள்ள தன் சொத்து, நகைகளை விற்று நிதி கொண்டுவந்து அணை கட்டி தென் தமிழகத்துக்குப் பாசனம் கொடுத்துப் பசி போக்கியவன்.
இன்று தென் தமிழகத்தில், நாங்கள் பாசனம் பெற்றுப் பசியாறுவது மட்டும் அல்ல, தவித்த வாய்க்குத் தண்ணீர் அருந்துவதும் இந்தத் தவப் புதல்வனின் தியாகத்தால்தான்.
தியாகம் குறைந்து அருவருக்கத் தகுந்த சுய நலமும் பேராசையும் நிரம்பிப்போன நம் தேசத்தில், எங்கிருந்தோ வந்து நமக்கு வாழ்வளித்த இந்தப் புனிதனைப் பெருமைப்படுத்த எங்கள் அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்று இரண்டு, மூன்று மாதங்களாக எண்ணி இருந்தோம். இந்த மகத்தான மனித னுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்ற மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
இவரது நாட்குறிப்பில் எழுதப்பட்டதாகக் குறிப்பிட்ட வாசகம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.
‘இப் புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதைத் தள்ளிவைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒரு முறை நான் இப் புவி யில் வரப்போவது இல்லை!’
இந்த வாசகம் நமக்கும் பொருந்தும்தானே!”