கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக எழுந்து நிற்கும் பிரச்னைகளால் பாதிக்கப்படப் போவது ஒரு தனி மனிதன்தானே என்று, அறிவுலகம் விலகி நின்று வேடிக்கைப் பார்க்கலாகாது. மதநல்லிணக்கம் ஆழமாக வேரூன்றியிருக்கும் தமிழ் மண்ணில் ஒரு திரைப்பட எதிர்ப்பு தவறான பாதிப்புகளை உருவாக்கி விடாமல் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இங்கே அனைவருக்கும் உண்டு. பாபர் மசூதி 1992-ல் இடிக்க…ப்பட்ட போதும் அமைதி காத்த பண்பாளர்கள் தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள். ‘விஸ்வரூபம்’ படம் இஸ்லாமியரைக் காயப்படுத்துவதாக இன்று ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பிரச்னை நீதிமன்றத்தில் போய் நின்றி ருக்கிறது. இந்த விரும்பத்தகாத சூழல் எங்கே போய் முடியும் என்பதுதான் கேள்வி.
ஓர் அமெரிக்கர் தயாரித்து வெளியிட்ட ‘Innocence Of Muslims’ என்ற திரைப்படத்தின் நோக்கம் மனிதகுலத்தின் அழகிய முன்மாதிரியாய் அரபு நிலத்தில் வலம் வந்த இறுதி இறைத்தூதர் நபி களாரையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தப் படம் திரையிடப்படுவதை இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்து அணிவகுத்தது நியாயமான நடவடிக்கை. ஆனால் கமல்ஹாசன், இஸ்லாமுக்கு எதிரானவர் இல்லையே. பயங்கரவாதிகளாய், மதத்தின் பெயரால் மனிதகுலத்தை அழித்தொழிக்க முயலும் மோச மான அடிப்படை வகுப்புவாதியராய் ஆயுதம் ஏந்திநிற்கும் கூட்டம் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களை எவ்விதம் ஆதரிக்க முடியும்? பின்லேடனையும், தலிபான்களையும் இஸ்லாமியர் என்பதற்காகவே, இங்குள்ள இஸ்லாமியர்கள் ஆதரிக்கக்கூடுமா? தன்னை ஓர் இந்து சந்நியாசி என்று நித்தியானந்தன் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக, அந்த வேடதாரியை எல்லா இந்துக்களும் ஏற்பது தகுமா? குஜராத் கலவரத்தில் மோசமான மிருகங்களைப் போல் வெறிபிடித்து ஊழித் தாண்டவம் நடத்தியவர்களை நாம் நியாயப் படுத்த இயலுமா? மிருகப் பண்புகள் மிக்கவரை மனிதர்களாக மாற்றுவதற்குத்தான் மதம்; மனிதர்களை மிருகங்களாக்குவது எந்த மதத்துக்கும் நோக்கம் இல்லை.
‘ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதால் நற்கூலி கிட்டும்’ என்பதுதானே நபி மொழி. ‘முஸ்லிம் அல்லாத ஒருவனுக்கு, முஸ்லிம் அநீதி இழைத்தாலோ, அவனது உரிமையைப் பறித்தாலோ, அவனுடைய சக்திக்கு மீறியச் சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ, அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக்கொண்டாலோ, நான் மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில், முஸ்லிம் அல்லாதவனின் வழக்கறிஞராக வாதாடுவேன்’ (நபி மொழித் தொகுப்பு) என்று வாய் மலர்ந்த அருட்பெருங் கருணை வள்ளல் அல்லவா பெருமானார்! ‘அல்லா வழங்கியவற்றில் இருந்து உண்ணுங்கள்; பருகுங்கள். பூமியில் குழப்பம் உண்டாக்கித் திரியாதீர்கள்’ என்று அறிவுரை வழங்குவது அல்லவா திருமறை! அல்லாவின் திருநாமங்களில் ஒன்றாக ‘அஸ்ஸலாம்’ என்பதற்குப் பொருள் ‘அமைதியை வெளிப்படுத்துபவன்’ என்பதுதானே. ‘வஸ்ஸில் ஹு ஹைர்’ (சமாதானமே சிறந்தது) என்பதன்றோ இறைவனின் மாசற்ற மறை வாசகம். ‘வாய்மொழியாலும், கைகளாலும் அடுத்தவருக்குத் தீங்கிழைப்பவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது’ என்று தீர்ப்புரைக்கும் அன்பு வழிப்பட்ட சமயத்தின் பாதையிலா தலிபான்களின் பயணம் நடக்கிறது? இவர்களை எதிர்த்து எழும் ‘விஸ்வரூபம்’ சாந்தியும் சமாதானமும் நாடும் மனங்களை எப்படிக் காயப்படுத்த முயலும்?
‘அழிவுப் போர் நடத்தப் புறப்படும் போதெல்லாம் தலிபான் தீவிரவாதிகள் திருமறையை வாசிப்பதுபோன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதும், திருமறையின் வசனங்கள் ஒலிக்கப்படுவதும் எங்கள் உணர்வுகளைக் காயப் படுத்துகின்றன’ என்று முஸ்லிம் அமைப்புகள் மனவருத்தத்தைப் பதிவுசெய்துள்ளன. இதைக் கமல்ஹாசன் மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். தீவிரவாதிகள் வழி தவறியவர்கள்; மனப் பிறழ்வில் வன்முறையை வாழ்நெறியாக வரித்துக் கொண்டவர்கள்; தாங்கள் ‘ஜிஹாத்’ என்ற புனிதப் போரில் ஈடுபட்டிருப்பதாக ஆழ்மனதில் நம்பிக்கை கொண்டவர்கள். தாங்கள் எதைச்செய்தாலும் இறை வனை முன்நிறுத்தியே செய்யப் பழ கியவர்கள். ‘விஸ்வரூபம்’ காட்சிகள் இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆனாலும், கமல்ஹாசன் இரணப்பட்ட இருதயங்களுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சிகளை வெட்டிவிட முன்வருவது நல்லது.
மகாபாரதத்தில் வரும் குரு க்ஷேத்திரம்உண்மை நிகழ்வன்று; அது ஓர் உயர்ந்த உருவகம். ஒவ்வொரு மனித மனத்திலும் தீய எண் ணங்களும், நல்லெண்ணங்களும் கலந்தே காட்சி தரும். இரண்டுக்கும் இடைவிடாமல் நடக்கும் போரே குருக்ஷேத்திரம். மனித இனம் உள்ள கடைசி நாள் வரை இந்தப் போர் நடந்துகொண்டுதான் இருக்கும். சூஃபிக்கள் பார்வையில் ‘ஜிஹாத்’ என்னும் புனிதப் போர் உடல் வலிமையைக் கொண்டு உலக அரங்கில் நடப்பது அன்று. அது உள்ளத்துக்குள் படிந்து கிடக்கும் தீய எண்ணங்களை அழித்தொழித்து இறைவனின் இருப்பிடமாக மனதை மாற்ற நடப்பது. இந்தப் புனிதப்போர் எல்லா இடங்களிலும் நடக்கட்டும். ‘விஸ்வரூபம்’ இந்தப் போருக்கு எதிரானது இல்லை.
மத்திய தணிக்கைக் குழுவின் தலைமை அலுவலர் லீலா சாம்சன், ‘சில முஸ்லிம் அமைப்புகள் ‘விஸ்வரூபம்’ தடைசெய்யப்பட வேண்டும்’ என்று போராடுவது கலாச்சார பயங்கரவாதம் (Cultural Terrorism) வளர்வதற்கு வழி வகுத்துவிடும். எந்த மதம் சார்ந்தவரின் மனதையும் புண்படுத்துவதுபோல் இந்தப் படத்தில் ஒரு காட்சியும் இல்லை. தடைசெய்யப்பட வேண்டும் என்று கிளர்ச்சி செய்வது சட்டபூர்வமான தணிக்கை அமைப்பை அவ மானப்படுத்தும் செயலாகும். தணிக்கைக் குழுவின் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, திரையரங்குகளில் படம் வெளியிடப்படுவதைத் தடுக்கவோ, அதைப் பார்க்கும் உரிமையை மக்களிடமிருந்து பறிக்கவோ, எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை’ என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இஸ்லாமிய சகோதரர்கள் யோசிக்க வேண்டும். சிவாஜி கணேசனுக்குப் பிறகு, தமிழகம் கண்டெடுத்த இணையற்ற நடிப்பாற்றல் கொண்ட கலைஞர் கமல்ஹாசன். ‘களத்தூர் கண்ணம்மா’வில் ஆதரவற்ற அனாதைச் சிறுவனாய் ‘அம்மாவும் நீயே’ பாடலுக்கு அழகாக வாயசைத்துத் தன் நிராதரவான நிலையை வியக்கத்தக்க விழியசைவிலும், சோகம் ததும்பும் முகபாவத்திலும் நேர்த்தியாக வெளிப்படுத்திய தருணத்திலிருந்து, இந்தியக் கலையுலகின் தவிர்க்க முடியாத நவரச நாயகனாய் கால நடையில் வளர்ந்து, நடிப்பில் விசுவரூபம் காட்டி நிற்பவர் கமல். ‘பதினாறு வயது’ முதல் ‘அன்பே சிவம்’ வரை நடிப்பில் அவர் காட்டிய பரிமாணங்களை இன்னொருவரால் எளிதில் காட்ட இயலாது. ஈட்டிய பணத்தைப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து இறுதி நாள் வரை இன்பமான வாழ்க்கைக்கு வழிதேடிக் கொள்ளும் நடிகர்களுக்கு நடுவில், பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுப் படவுலகில் கையைச் சுட்டுக்கொள்ளும் கலைத் தாகமுள்ள கமல், தமிழினம் பெருமை கொள்ள வேண்டிய மனிதர். ரஜினிக்கும் கமலுக்கும் தமிழகம் கொடுத்தது அதிகம். அதற்குக் கைம்மாறாகத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் இவர்கள் இருவரும் கொடுத்தது மிகமிகக் குறைவு. இந்த விமர்சனம் எனக்கு எப்போதும் உண்டு. ஆயினும் 90 கோடி ரூபாய் செலவழித்து மூன்று மொழிகளில் எடுத்த படத்தை வெளியிட முடியாமல் துடிக்கும் ஒரு கலைஞனின் வலியை என்னால் பூரணமாக உணர முடிகிறது. அடுத்தவர் வலி உணர்ந்து அதற்கு மருந்திடுவது அல்லவா உண்மையான மதம்; அதுதானே உன்னதமான ஆன்மிகம்.
வீடற்ற, வேலையற்ற, இலக்கின்றிப் பயணிக்கிற ஏழைகளைத் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ‘டிராம்ப்’ (tramp) என்ற பாத்திரத்தின் மூலம் நகைச்சுவை இழையோட ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தி, அமெரிக்க சமூகத்தின் முதலாளித்துவ முகமூடியை விலக்கி, அதன் ஈரமற்ற இதயத்தைத் தோலுரித்துக் காட்டிய ‘குற்றத்துக்காக’ சார்லி சாப்ளின் மீது கம்யூனிஸ்ட் சாயத்தைப் பூசி, அவரை நாடு கடத்தி 20 ஆண்டுகளுக்கு மேல் அலைக்கழித்துக் காயப்படுத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம். சார்லி சாப்ளின் என்ற மகா கலைஞனுக்கு நேர்ந்த துயரம் மதம் காரணமாக நம் மகா கலைஞர் கமலுக்கும் நேர்ந்து விடலாகாது.
‘பம்பாய்’ படத்தில் முஸ்லிம்களுக்குச் சார்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், அந்தப் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டல் விடுத்த பால்தாக்கரேவைச் சந்தித்து, பணிவாக அவர் இட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மணிரத்னத்தின் படைப்புரிமை சிவசேனாவின் இந்துத் துவத்தால் பறிக்கப்பட்டது கலாசாரப் பயங்கரவாதம் என்றால், இன்று ‘விஸ்வரூபம்’ வெளிவர அனுமதிக்க மாட்டோம் என்று அடம்பிடிப்பதை எந்தப் பெயரில் அழைப்பது?
நேற்று துப்பாக்கி; இன்று விஸ்வரூபம்; நாளை அமீரின் ஆதிபகவன் என்று தொடர்வது சிந்தனைச் சர்வாதிகாரத்துக்கான சமிக்ஞை. விஜயின் தந்தை இயக்குநர் சந்திரசேகரன், எதிர்ப்பை வெளிப்படுத்திய அமைப்புகளுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டு, அவர்கள் நிபந்தனைகளை ஏற்றுச் சில காட்சிகளை நீக்கிய பிறகு, ‘துப்பாக்கி’ திரைக்கு வந்தது. இஸ் லாமியரைப் புண்படுத்தும் காட்சிகள் ‘துப்பாக்கி’யில் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பிறகும் ஒவ் வொரு படமும் ஏதோ ஒரு சமூகத்திடம் இன்னொரு ‘சான்றிதழ்’ வாங்கியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வலுப்பெறுவது சமூகத்துக்குச் சரியானது அன்று.
‘இஸ்லாம் சமயம் சகிப்புத்தன்மையற்றது’ என்று அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் திட்டமிட்டு ஒரு தவறான கற்பிதத்தை நிலைநிறுத்த நீண்ட காலமாக முயன்று வருகின்றன. அன்பு சார்ந்த, அனைவரையும் சகோதரர்களாகப் பாவிக்கும் பண்பை அடித்தளமாகக் கொண்ட, துயருற்றுத் தவிக்கும் ஏழைக்கும் பாழைக்கும், அனாதைக்கும் அகதிக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்காகவே ‘ஜகாத்’ என்னும் தானம் வழங்குதலை முக்கிய மார்க்கக் கடமையாக வலியுறுத்திய நேரில் சந்திக்கும் தோழர்களை மார்புறத் தழுவி மனித நேயத்தை வெளிப்படுத்துகிற, முதற்பார்வையில் முகமன் கூறும்போது ‘அஸ்ஸலாமு அலைக்கும் – வ அலைக்கும் வஸ்ஸலாம்’ என்று ( உங்களுக்கு அமைதி கிட்டுவதாக) பாசத்தைப் பகிர்ந்துகொள்கிற சமயம், சிலரது உணர்ச்சியின் வெளிப்பாடுகளால் தவறான புரிதலுக்கு உட்படலாமா?
கமல்ஹாசன் தயாரித்த ‘ஹே ராம்’ திரைப்படத்தில் காந்திக்கு எதிரான காட்சிகளை அமைத்தார். காந்தியை விமர்சிக்கும் வசனங்கள் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. அது படத்தின் போக்கில் தவிர்க்க முடியாதது. அதற்காக மகாத்மாவுக்கு எதிரான மனிதர் கமல்ஹாசன் என்று எந்தக் காந்தியவாதியும் கொடி பிடிக்கவில்லை. ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனக்கு மகாத்மா அல்ல. அவர் எனக்கு நண்பர். என்னால் அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் என்னுடன் பேசாமலேயே செத்துப் போய் விட்டாரே என்ற வருத்தம் உண்டு’ என ஒரு முறை கமல் குறிப்பிட்டிருந்தார். அப்படிப் பேசுவது கமலுக்கான அடையாளம். இதை எந்த காந்தியச் சிந்தனையாளரும் அதிகப் பிரசங்கித்தனம் என்று எண்ணவில்லை.
‘விஸ்வரூபம்’ படம் வெளிவருவதும், வராமல் போவதும், கமல்ஹாசன் லாபமடைவதும் நட்டப் படுவதும் ஒரு தனிநபர் விவகாரம். இதற்காக நீங்கள் மெனக்கெட்டு எழுத வேண்டுமா என்று கேட்கலாம். மீண்டும் சொல்கிறேன். இது தனிநபர் பிரச்னை இல்லை. ‘நாங்கள் நினைப்பதைத்தான் நீ எழுத வேண்டும். நாங்கள் விரும்பும் விதத்தில்தான் உன் எந்தப் படைப்பும் இருக்க வேண்டும். நாங்கள் சொல்வதற்கேற்பவே நீ சிந்திக்க வேண்டும்’ என்று சிலர் சமூகத்தின் சட்டாம்பிள்ளைகளாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு கட்டளையிடப் புறப்பட்டு விட்டால், கலாசார பயங்கரவாதம் வேறொரு வடிவில் விசுவரூபம் கொள்ளும். அப்போது படைப்பாளியின் சுதந்திரம் பறிபோகும். பாசத்தின் அகோரப் பசிக்கு அறிவுலக நியாயங்கள் அனைத்தும் இரையாகும்.
Source: ஜூனியர் விகடன் 06 02 2013