வேற்றுமைக்கு இஸ்லாமில் இடமில்லை …
தமிழருவி மணியன்
(தினமணி ஈகைப் பெருநாள் மலர் – 2016)
உயர்ந்த அன்பையும், உலக சகோதரத்துவத்தையும், பேதங்களற்ற சமத்துவத்தையும் அடித்தளமாக்க் கொண்டு இந்தப் பூவுலகில் இஸ்லாம் மலர்ந்தது. ‘இஸ்லாம்’ என்ற அரபுச் சொல்லுக்கு ஆண்டவனிடம் அடைக்கலமாதல் என்றும், ‘அமைதி’ என்றும் பொருள் உண்டு. மண்ணில் உள்ள மாந்தர் அனைவரும் ஆதாம் என்ற முதல் மனிதனின் வழிவந்தவர்கள் என்னும் மூலதந்தைக் கோட்பாட்டை ‘பனி ஆதம்’ என்று முழங்கும் இஸ்லாமின் இரண்டு உயிர்த்தலங்கள் சகோதரத்துவமும், சமத்துவமும் ஆகும். ஏகத்துவம் என்ற ஒற்றைக் கொள்கையே இச்சமயத்தின் சாரமாகும்.
பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்தருளும் ஆண்டவனுக்கு அடிபணிந்து, அவன் அனைவருக்கும் வகுத்தளித்த வாழ்வியல் நெறிக்குட்பட்டு, மனித இனம் நிம்மதியும் நிலைபேறும் அடைய முடியும் என்ற பேருண்மையைத் ‘தீனுல் இஸ்லாம்’ என்னும் இறைமார்க்கம் அறிவுறுத்துகின்றது. இஸ்லாம் மாந்தரை இறையச்சம் உடையோர், இறையச்சம் அற்றோர் என்று இரு பிரிவுகளாக மட்டுமே பேதப்படுத்திப் பார்க்கின்றது. இதைத் தவிர வேறெந்த வேற்றுமைக்கும் இஸ்லாமில் இடமில்லை.
இஸ்லாம் அகிலத்தில் அன்பையும், அமைதியையும் அறிவுறுத்தும் சமயமாகும். பல பெயர்களில் அழைக்கப்படும் ஆண்டவனுக்கு ‘அஸ்ஸலாம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ‘அஸ்ஸலாம்’ என்றால் ‘அமைதியை வெளிப்படுத்துபவன்’ என்று பொருள். அன்பு சார்ந்து உறவையும், அமைதி சார்ந்த உலகையும் வலியுறுத்தும் இஸ்லாமின் திருமறை ‘சமாதானமே சிறந்தது’ (வஸ்ஸில் ஹு ஹைர்) என்றும், ‘மார்க்கத்தில் பலாத்காரம் இல்லை’ என்றும், ‘பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள்’ என்றும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் அறிவுறுத்துகின்றது. ஒவ்வொருவரும் தோழமையுடன் முகமன் கூறும்போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்றும் ‘வ அலைக்கும் விஸ்ஸலாம்’ என்றும் வாழ்த்தினை வெளிப்படுத்துவது இஸ்லாமிய வாழ்க்கை முறையாகும். ‘உங்களுக்கு அமைதி கிட்டுவதாக’ என்பதுதான் இந்த வாழ்த்தின் விளக்கம்.
இஸ்லாம் அறிவுறுத்தும் ஐந்து மார்க்கம் சார்ந்த கடமைகளுள் ஒன்று ‘ஜகாத்’ என்று அழைக்கப்படும் தானம் ஆகும். திருமறை தொழுகையை வலியுறுத்தும் இடங்களில் தானத்தையும் தவறாமல் வற்புறுத்துகிறது. ‘அல்லாவின் மார்க்கத்தில் தம்மிடம் உள்ள பொருளைச் செலவிடும் நல்லவர்களின் செல்வத்திற்கு, மண்ணிலிடும் ஒரு தானிய மணியிலிருந்து நான்கு கதிர்கள் வெடித்து, ஒவ்வொரு கதிரிலும் பலநூறு தானிய மணிகள் விளைவதைச் சான்றாகச் சொல்லலாம்’ என்கிறது திருமறை.
’முறையாகக் கணக்கிட்டு நூறு ரூபாய்க்கு இரண்டரை ரூபாய் கொடுத்தால்தான் ஜகாத் கடமை முழுமையாக நிறைவேற்றப்படும். உன் செல்வத்தில் இரண்டரை விழுக்காடு பங்கு உன்னுடையது அன்று. அது ஏழைகளுக்கு உரியது. தங்கத்தில் சேர்ந்திருக்கும் அழுக்கைப் போல், வைரத்தில் மறைந்திருக்கும் கரித்துகள் போல், முத்து-பவளங்களில் படிந்திருக்கும் பாசியைப் போல் உன் செல்வத்தில் படிந்திருக்கும் கறையே அந்த இரண்டரை விழுக்காடு பங்கு. அதை நீக்கினாலொழிய உன் செல்வம் சுத்தம் பெறாது’ என்பது பெருமானார் வாக்கு.
செல்வம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை இஸ்லாம் ஏற்க மறுக்கிறது. செல்வத்தின் நினைவில் சீரழிபவரும், காலத்தைப் பொருள் தேடுவதில் செலவு செய்பவரும், அதில் சிறிதளவேனும் அடுத்தவருக்கு வழங்க மறுப்பவரும் இறைவனிடமிருந்து விலக்கப்பட்டவர்கள்’ என்றும், ‘செல்வம் என்பது பொருள் சேர்ந்திருப்பது அன்று, தேவையற்றிருத்தலே உண்மையான செல்வம்’ என்றும் திருவாய் மொழிந்தார் நபிகளார். ‘இறைவன் உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்ல. மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும்தான் பார்க்கிறான்’ என்கிறது இஸ்லாம்.
வறுமையின் கொடுமையை, பசிப்பிணியை செல்வச் செழிப்பில் மிதப்பவர்கள் உணர்வதற்கான வாய்ப்பை ரமலான் நோன்பு வழங்குகிறது. கூட்டுத் தொழுகை சமத்துவ சமுதாயத்திற்கு வழியமைக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை முழுமையாக உணர்ந்த மகாத்மா காந்தி தன்னுடைய ‘யங் இந்தியா’ இதழில், ‘இஸ்லாம் வகுத்தளித்த நெறிமுறைகளைத் தொடர்ந்து பயின்றதில், அதன் வலிமை வாள் முனையில் இல்லை என்ற உண்மையை என்னால் பூரணமாகப் புரிந்துகொள்ள முடிந்தது’ என்று குறிப்பிட்டார்.
இஸ்லாம் சமயத்தின் இறுதி இறைத் தூதர் நபிகள் போன்று இந்த மண்ணில் வாழ்ந்தவர் வேறெவரும் இல்லை. தன்னை இறைமகன் என்றோ, பல்வேறு அதிசயங்களை அரங்கேற்றுவதற்காக வந்தவர் என்றோ ஒருபோதும் அவர் உரைத்தில்லை. ‘உடன் பிறந்த மக்களே! என்னை அளவுக்கு மீறிப் பாராட்டாதீர்கள். காய்ந்த ரொட்டியையும், உலர்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஏழைத் தாய்க்குப் பிறந்து அனாதையாக வளர்ந்தவன் நான்’ என்றவர் நபிகளார். பிறப்பு தொட்டு இறப்பு வந்து சேரும் இறுதி நாள்வரை ஒழுக்கம் சார்ந்த, நேர்மை நிறைந்த, எளிமை துலங்க அறம் தழுவிய வாழ்வை நடத்திய அண்ணல் அவர்.
ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பரப்புவதற்காகத் தம்மை முற்றாக அர்ப்பணித்தவர், ‘மற்ற மதங்களை நம்பாதே! பிற வேதங்களின் செய்திகளைச் செவிமடுக்காதே!’ என்று வற்புறுத்துவது வழக்கம். ஆனால், பெருமகனார், ‘ஆண்டவனை நீங்கள் நம்புவது உண்மையெனில், என்னை நம்புங்கள். என்னை நீங்கள் நம்புவது உண்மையெனில் எல்லா தீர்க்கதரிசிகளையும் நம்புங்கள்’ என்றார். ‘கூடாரங்கள் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கட்டும். ஆனால், உங்கள் இதயங்கள் மட்டும் எப்போதும் இணைந்தே இருக்கட்டும்’ என்ற பெருமகன் அவர்.
கல்லையும், மண்ணையும், வானத்து நட்சத்திரங்களையும் வழிபடு கடவுளர்களாக நேர்ந்து கொண்ட நாகரிகமற்ற முரட்டு அரபுப் பாலைநில மக்களிடம் ஓரிறைக் கொள்கையாகிய ஏகத்துவத்தை நிலைநிறுத்திய வரலாற்றுச் சாதனையை வியந்து நோக்கிய மைக்கேல் ஹெச் ஹார்ட் என்ற யூதர், தன்னுடைய ‘புதிய வரலாறு படைத்த நூறு பேர் வரிசை’ என்ற நூலில் முதலிடத்தை நபிகளுக்கு வழங்கினார்.
இன்றைய சமூக வாழ்வில் சின்னஞ்சிறு பதவியில் அமர்ந்திருப்பவர் கூட ஆயிரம் ஆடம்பரங்களோடும், ஆரவாரங்களோடும் வாழும் வாழ்வியலை நாம் சகித்துக் கொள்கிறோம். ஆனால், அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவியிருந்த இஸ்லாமியப் பேரரசின் ஆட்சியாளராகவும், சமயத் தலைவராகவும், நீதியரசராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் ஏழையிலும் ஏழையாகவும், எளிமையிலும் எளிமையாகவும் தன் வாழ்வை நடத்தினார். அவர் ஒரு நார்க்கட்டிலில், ஈச்ச மட்டைகளால் நிரப்பப்பட்ட தலையணையில் வெற்றுடம்புடன் படுத்திருந்ததைப் பார்த்து ஹஸ்ரத் உமர் கண்ணீர் சிந்தினார். மரணம் வாய்க்கும் வரை நபிகளாரின் வீட்டில் இரண்டு நாட்கள் தொடர்ந்தாற்போல் உலர்ந்த ரொட்டியைக்கூட யாரும் வயிறு நிரம்ப உண்டதில்லை.
‘அண்டை வீட்டான் வயிற்றுக்கில்லாது வாடுகையில், தான் மட்டும் வயிறு புடைக்கத் தின்பவன் மோமின் ஆகமாட்டான். எந்த மனிதனும் தன் கரங்களால் உழைத்து உண்ணும் உணவை விட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. பணிவு என்ற பண்பில்லாதவன் வேறெந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே. மனிதனின் எல்லாக் காரியங்களுக்கும் ஆதாரமாய் இருப்பது அவனது நேர்மை மட்டுமே’ என்பன போன்ற நபிமொழிகள் அனைத்தும் நம்மை நெறிப்படுத்தக்கூடியவை. திருமறையின் வார்த்தைகளையே தன்னுடைய வாழ்க்கையாக்கிக் கொண்ட பெருமானாரைப் பற்றி ஆயிஷா நாச்சியார் குறிப்பிடும் போது, ‘பெருமானின் குண ஒழுக்கம் திருக்குர்-ஆனாய் இருந்தது’ என்றார். இதற்குமேல் நபிகளாரைப்ம் பற்றி யாரால் என்ன சொல்லிவிட முடியும் !
இஸ்லாம் அன்பில் விளைந்தது. நபிகளார் அன்பே வடிவாய் வாழ்ந்தவர். அன்பில்தான் சகோதரத்துவம் வளரும். அன்பினால்தான் சமத்துவம் மலரும். இதை உணராதவர்களுக்கு இஸ்லாமில் இடமில்லை.