1330 நாட்களாக காலில் விழுந்த காந்தி!
மது அருந்துபவரா நீங்கள்?
கடந்த மூன்று ஆண்டுகளில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நீங்கள் மது அருந்தச் சென்றிருந்தால், நிச்சயம் அவர் உங்கள் காலில் விழுந்திருப்பார். உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறியிருப்பார். உங்களை குடிக்கவிடாமல் தடுத்திருப்பார்.
அவர், 83 வயது பாலகிருஷ்ணன் என்கிற பிராங்கிளின் ஆசாத் காந்தி.
மதுவுக்கு எதிரான தனது போராட்டத்தில் 1,330 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் குடிக்க வருபவர்களின் காலில், வயது வித்தியாசம் இல்லாமல் விழுந்து போராடியிருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த காந்திய மக்கள் இயக்கத்தின் மூத்தத் தலைவரான ஆசாத் காந்தி. குடிமன்னர்கள், அவர் மீது எச்சில் துப்பியிருக்கிறார்கள், கல் வீசியிருக்கிறார்கள், கொலை செய்துவிடுவேன் என்றெல்லாம்கூட மிரட்டிருக்கிறார்கள். ஆனாலும் பதிலுக்கு இவர் செய்தது அவர்களின் காலில் விழுந்தது மட்டுமே. வாழும் காந்தியவாதியான அவருக்கு, அவரது போராட்டத்தின் 1,330-வது நாளான 16-ம் தேதி பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழருவி மணியன் கலந்துகொண்டார்.
முதலில் பேசிய சிற்பி வேலாயுதம், ‘‘பாலகிருஷ்ணன் ஐயா இந்தப் போராட்டத்தை மிகுந்த வைராக்கியத்தோடு ஆரம்பித்தார். 25 நாட்களில் முடித்துக்கொள்ளுங்கள் என்று கேட்டோம். ‘முடியாது’ என்றார். 50-வது நாளிலும் முடியாது என்றார். 100-வது நாளிலாவது முடித்துக்கொள்ளுங்கள் என்றோம், மறுத்துவிட்டார். இப்போது திருக்குறளைக் குறிக்கும் வகையில் 1,330-வது நாளில் முடித்திருக்கிறார். அவரிடம் 28 ஆயிரம் கோடி ரூபாய் இருந்திருந்தால் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியிருப்பார். பணம் இல்லாததால்தான் குடிப்பவர்களின் கால்களில் போய் விழுந்துகொண்டிருக்கிறார். அவருடைய கடைசி ஆசை என்ன தெரியுமா? எப்படியாவது ஜெயிலுக்குப் போகவேண்டும். சிறைக்குள் போய் சத்தியாகிரகம் செய்து பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதுதான்!’’ என்றார்.
அடுத்ததாக, பாலகிருஷ்ணன் என்கிற பிராங்கிளின் ஆசாத் காந்தி பேசினார். ‘‘கூட்டமெல்லாம் மதுக்கடைகள் முன்பு நிரம்பி வழிகின்றன. அந்தக் கூட்டத்தில் நம் அருமை மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். நாங்களும் காலைப்பிடித்து கெஞ்சுகிறோம். அவர்கள் குடும்பத்துக்காகக் கண்ணீர் வடிக்கிறோம். சாதாரண கொலை பண்றவங்களுக்குக்கூட தூக்குத் தண்டனை தர்றாங்க. பல்லாயிரக்கணக்கான மக்களை மதுவைக் கொடுத்து கொலை செய்கிற அரசுக்கு என்ன தண்டனை? சாகுறதுக்குள்ள ஜெயிலுக்குப் போகணும். மதுவுக்கு எதிரா போராடி சிறைக்குள்ளயே மரிக்கணும். அதைப் பார்த்து நாலுபேராவது திருந்தினா, அதுவே போதும்’’ என்று உணர்ச்சிபொங்க பேசிமுடித்தார்.
தமிழருவி மணியன் பேசும்போது, ‘‘இங்கு வந்திருப்பவர்களை எண்ணிப்பார்த்தேன். வெறும் 125 பேர்தான் இருக்கிறீர்கள். ஒரு மனிதனுக்கு, குடிக்காதே என்று சொல்லி மற்றவர் காலில் விழுந்து மன்றாடவேண்டியதன் அவசியம் என்ன.? பாலகிருஷ்ணன் ஒரு டாக்டர். அவர் தெருத்தெருவாக டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று குடிக்க வருபவர்களிடம், ‘ஐயா நீங்க குடிக்காதீங்க. குடி உங்கள் உடலைக் கெடுக்கும், உங்கள் குடும்பத்தைக் கெடுக்கும், நீங்கள் இருக்கக் கூடிய சமூகத்தைக் கெடுக்கும், சகலத்தையும் கெடுக்கும்’ என்று அவர்களுடைய நலனுக்காக இவர் போய் காலில் விழுகிறார்.
இப்படி 1,330 நாட்கள் இவர் காலில் விழுந்து போராடியிருக்கிறார். ஆனால், அவருக்காக 130 பேர்கூட வரவில்லை. இந்த நாட்டில் நல்லவர்களுக்கு மரியாதை என்பதோ, வரவேற்பு என்பதோ இல்லை. ஆனால், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பு வழங்கியபோதும் அந்த வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பின்போதும் பெங்களூருவில் இருந்து போயஸ் கார்டன் வரைக்கும் வரிசையாக நிற்கிறார்கள். நாடா இது? 100 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி எழுதினான்… ‘ஈரத்திலேயே இருப்பான், ஈரத்திலேயே படுப்பான், ஈரத்திலேயே சமையல் செய்வான். மருந்துக்குக்கூட ஓர் உலர்ந்த தமிழனை இந்த மண்ணில் பார்த்ததில்லை’ என்று. இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால் சத்தியமாக இந்த தமிழ் மண்ணில் பிறக்கவேண்டும் என்று ஆசைப்பட மாட்டேன் என சத்தியம் செய்கிறேன். ஓர் அரசு, மின் உற்பத்திக்கான இலக்கை நிர்ணயிக்கலாம், கல்விக்கான இலக்கை நிர்ணயிக்கலாம். ஆனால், இந்த அரசு 29 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கிறது. கடந்த ஆண்டு மது விற்பனையின் மூலம் அரசுக்கு 26 ஆயிரம் கோடி வருமானம் வந்திருக்கிறது. 26 ஆயிரம் கோடி என்பது வரி வருவாய். அப்படியென்றால் மது விற்பனையின் அளவைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்’’ என்று முடித்தார்.
போதை தெளிய வேண்டும்!
– எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: எம்.விஜயகுமார்