2016 சட்டமன்றத் தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அறிவிக்க வேண்டுமென்று காந்திய மக்கள் இயக்கம் தமிழக அரசை வேண்டிக்கொள்கிறது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழகத்தில் குடிப்பதற்காக மட்டும் பல்வேறு வகைகளில், ஆண்டுக்கு 50000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் மதுவுக்கு செலவழிக்கும் நிலையில் ஏழ்மையை எந்த நாளும் முற்றாக அகற்ற முடியாது என்பதை அரசு உணர வேண்டும். 2016ல் நடக்கவிருக்கும் சட்ட மன்றத்தேர்தலில் மதுக்கடைகள் மூடப்படுவதே மக்களின் முதன்மையான கோரிக்கையாக முன்வைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வைத் தூண்டுவதும், தேர்தல் களத்தில் மதுவிலக்கை முக்கியப் பிரச்சனையாக முன்னிறுத்துவதும் தான் காந்திய மக்கள் இயக்கத்தின் ஒரே கடமையாக இருக்கும். ஆகஸ்ட் 16 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் பிற்பகல் 3 மணியளவில் மது விற்பனைக்கு எதிராக காந்திய மக்கள் இயக்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது.
‘மதுவற்ற மாநிலம்’ என்ற எங்கள் லட்சியப் பயணத்தின் முதற்கட்டமாக இப்போராட்டம் அமையும். மதுவற்ற மாநிலத்தைக் காணும் வரை காந்திய மக்கள் இயக்கம் ஓயாமல் போராடும் என்பதை இந்த அரசுக்கு உணர்த்த விரும்புகிறேன். என்று தெரிவித்துள்ளார்.