திருப்பூர்: 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் தலைமையில் நல்ல கூட்டணி ஆட்சி உருவாகும் என்று அக்கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். வரும், 2016 சட்டசபை தேர்தலில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மாற்று அணி அமையும் என்ற நம்பிக்கை அறவே இல்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.
காந்திய மக்கள் இயக்கம் சார்பில், 2016 சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம், திருப்பூரில் நேற்றிரவு நடந்தது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு கிருஷ்ணமூர்த்தி, கோவை வடக்கு தொகுதிக்கு டென்னிஸ் கோவில் பிள்ளை உட்பட, 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழருவி மணியன் பேசியதாவது:
பதவிக்கு ஆசைப்பட்டும், அதிகாரத்தை சுவைக்க வேண்டும், அதிகாரத்தை பயன்படுத்தி பெரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இந்த வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தமிழுக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதற்காகவே இவர்கள் போட்டியிடுகிறார்கள். மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்பதை முன்னுறுத்தியே மக்களை சந்தித்து வருகிறோம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மாற்று அணி உருவாக்க முயற்சித்த போது, அரசியல் மேடை என்னை ஏமாற்றி விட்டது. அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென, வீதியில் நிற்பவர்களை இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை.
முதல்வர் கிரீடம்
இன்று, முதல்வர் கிரீடத்தை தலையில் வைத்தபடி, ஒவ்வொரு கட்சி தலைவரும், கண்ணாடியில் அழகுபார்த்துக் கொண்டிருக்கின்றனர்.மத்தியில் ஆண்ட காங்கிரசுக்கும், ஆளும் பா.ஜ.க வுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
பூரண மதுவிலக்கு
தமிழகத்தில் முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தின் தீமைகளாக அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் உள்ளன. பூரண மதுவிலக்கை அமல்படுத்த இந்த இரண்டு கட்சிகளும் தயாராக இல்லை. மத்தியில் காங்கிரஸ், பாஜக, மாநிலத்தில் தி.முக., அ.தி.மு.க. ஆகியவை புறக்கணிக்கப்பட வேண்டும்.
மாற்று அணி
மாற்று அணி உருவாக்கும் முயற்சியை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கையில் எடுத்துள்ளார். 2016 தேர்தலில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மாற்று அணி அமையும் என்ற நம்பிக்கை அறவே இல்லை. மாற்று அணி உருவானாலும், எங்களது வேட்பாளர்களை வாபஸ் பெற மாட்டோம்.
18 வேட்பாளர்கள்
இந்த கூட்டத்தில் முதல்கட்டமாக 18 வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளோம். அடுத்தகட்ட அறிவிப்புக்கு பின் வேட்பாளர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கும். யாருடனும் கூட்டணி அமைத்தும் போட்டியிட மாட்டோம். அதுபோல் இந்த வேட்பாளர்கள் வாபஸ் பெறவும் மாட்டார்கள்.
தீமைகளுக்கு வாக்களிப்பு
தமிழக மக்கள், தி.மு.க.,வை பெரிய தீமையாகவும், அ.தி.மு.க.,வை சிறிய தீமையாகவும் பார்க்கின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், சிறிய தீமை பரவாயில்லை என்று சகித்துக்கொண்டு ஓட்டளிக்கின்றனர். இவ்விரு கட்சிகளையும் புறம்தள்ளாமல், தமிழர்களுக்கு கதிமோட்சம் கிடைக்காது; காந்திய மக்கள் இயக்கம் மூலமாக மட்டுமே, 2016ல் மாற்று அரசியல் சக்தி உருவாகும்
எங்கள் தலைமையில்
வருகிற சட்டசபை தேர்தலில் 10 வேட்பாளர்கள் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் கூட, அடுத்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் தலைமையில் நல்ல கூட்டணி ஆட்சி உருவாகும் என்பது உறுதி என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
Thanks & Source : http://tamil.oneindia.com/news/tamilnadu/gandhiya-makkal-iyakkam-lead-alliance-2021-assembly-election-231418.html